ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து.. வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி.. அதிர்ந்த போலீஸ்.. என்ன நடந்தது?
இளம்பெண்ணை தாக்கி, காரில் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தலைநகரில் தந்து வருகிறது
டெல்லி: மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளி கடத்தி சென்றுள்ளார் ஒரு இளைஞர்.. இந்த சம்பவம் டெல்லில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் சிக்னலில், இளம்பெண்ணிடம் ஒருவர் அத்துமீறி தாக்குகிறார்.
பிறகு அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிவிடுகிறார்.. உடனே அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிடுகிறது.

வீடியோ
இந்த சம்பவத்தைதான், சிக்னலில் வேறொரு காரில் இருந்தவர், வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார். இதையடுத்து, இந்த வீடியோ வைரலானதுடன், தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சோஷியல் மீடியாவில் விவாதமும் வெடித்து கிளம்பியது.. அந்த பெண்ணை காருக்குள் ஏற்றி கொண்டு சென்றபோது, இதை அங்கிருந்தோர் பார்த்ததாகவும், ஆனால், யாருமே உதவ முன் வரவில்லை என்றும் புகார்கள் வெடித்து கிளம்பின.. இந்த வீடியோவை பார்த்த டெல்லி போலீசாரும் தாங்களாகவே முன்வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

வினோத்
கடத்தல் வழக்குப்பதிவு செய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினர்.. வீடியோவில் பதிவான அந்த கார் நம்பரின் அடிப்படையில், கார் ஓனர் தீபக் என்பது கண்டறியப்பட்டது.. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அந்த காரை லஹ்கன் என்பவருக்கு தீபக் விற்றுள்ளதும், பிறகு, லஹ்கன் அந்த காரை வினோத் என்பவருக்கு விற்றுள்ளதும், அந்த காரை ஹரிஷ் என்பவர் வாங்கி, சைலேந்தர் என்பவருக்கு விற்றுள்ளதும் தெரியவந்தது. இந்த சைலேந்திரர் தான், இப்போது அந்த காரை வாடகைக்கு ஓட்டிவருகிறார்... இதையடுத்து, சைலேந்தர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்..

புக்கிங்
அதாவது, ரோகிணி நகரில் இருந்து விகார்புரி நகருக்கு, இந்த காரை சிலர் புக் செய்திருக்கிறார்கள்.. காரில் இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் பயணித்துள்ளனர்.. மங்கல்புரி சிக்னல் பகுதியில் வந்தபோது காரில் இருந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.. காருக்குள்ளேயே இவர்கள் சண்டை போட்டுக் கொண்டதையடுத்து, அந்த இளம்பெண் திடீரென காரில் இருந்து கீழே இறங்கினார்... உடனடியாக, காருக்குள்ளிருந்த அந்த இளைஞர், வெளியேவந்து, பெண்ணை தாக்கி மறுபடியும் காருக்குள்ளேயே தள்ளியிருக்கிறார்.. மறுபடியும் காருக்குள் சண்டை போட்டுக் கொண்டே வந்த அந்த இளம்பெண்ணும், இளைஞரும் விகாஷ்புரி பகுதியில் இறங்கிவிட்டார்களாம்.

மாவுமில் ஓனர்
பேடிஎம் மூலம், பணம் செலுத்திவிட்டு கிளம்பிவிட்டதாக, டிரைவர் சைலேந்திரர் வாக்குமூலமாக போலீசில் சொன்னார். இதையடுத்து போலீசார், PAY TM ஆக் மூலமான பண பரிவர்த்தனையையடுத்து, அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து, அவரையும், அவரது ஆண் நண்பர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து, கிடுக்கிப்பிடி கேள்விகளை துவங்கினர்.. இவர்கள் 2 பேருமே நண்பர்களாம்.. இளம்பெண் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக வேலை செய்து வருகிறார்.. அந்த இளைஞர் மாவு மில் ஓனர் ஆவார்..

பேடிஎம்
தனிப்பட்ட காரணங்களுக்காக இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.. அதனால்தான் இளம்பெண் காரை விட்டு கீழே இறங்கவும், ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.. பெண்ணுக்கு மருத்துவ உதவி, ஆலோசனையை வழங்கிய போலீசார், இளைஞரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்ணை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளிய இளைஞரை பேடிஎம் செயலி உதவியுடன் போலீசார் மடக்கிபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications