ரூ.371 கோடி ஊழல்.. கைதான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு ரத்தாகுமா? இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்த நிலையில் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திர மாநிலத்தில் முதல்வராகவும் இருந்துள்ளார். தற்போது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பிறகு கடந்த மாதம் 9 ம் தேதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தை நடத்தினர். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார். இது ஒருபுறம் இருக்க சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் 2 நாட்கள் ஊழல் தடுப்பு படையின் சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை என்பது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், திடீரென வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதோடு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தை முடக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு மீது சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் நேற்று சந்திரபாபு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த மனுவை நாளை (அதாவது இன்று) விசாரிக்க சந்திரசூட் வாய்மொழியாக கூறினார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் மனு என்பது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் நீதிபதி எஸ்விஎன் பாட்டி இடம்பெற்றிருந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் வழக்கில் இருந்து தானாகவே அவர் விலகவதாக அறிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்ய சந்திரபாபு தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து தான் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications