வடக்கில் புதிய சர்ச்சை.. சீனாவுடன் கைகோர்த்த பூட்டான்! உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், வடக்கு பகுதியிலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், நமது அண்டை நாடான பூட்டான், சீனாவுடனான உறவில் நெருக்கம் காட்டி வருகிறது. இது இந்தியாவுக்கு புதிய எல்லை பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.
லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலிலிருந்து அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்படி இருக்கையில், நமது அண்டை நாடான பூட்டான், சீனாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது. இந்தியாவை போலவே பூட்டானும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 764 சதுர கி.மீ பரப்பளவு எல்லையாக இருக்கிறது. இப்படி இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு பூட்டானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை சீனா உரிமை கோரியது. ஆனால் பூட்டான் இதனை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து எல்லையை வரையறுத்துக்கொள்வதில் இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், இனி வரும் காலங்களில் எல்லையை பிரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு தரப்பினரும் ஒரு நிபுணர் குழுவின் கூட்டத்தை நடத்தி எல்லையை நிர்ணயிப்பதற்கான தொழில்நுட்பக் குழுவை அமைத்தனர். தொழில் நுட்ப குழுவின் முதல் கூட்டமும் அதே மாதத்தில் நடத்தப்பட்டது.
இங்குதான் இந்தியாவுக்கு சிக்கல் மேலெழுகிறது. அதாவது, ஹிமாலயன் ஷாங்க்ரிலாவின் வட-மத்திய பிராந்தியத்தில் சீனா தனது பிராந்திய உரிமைகளை பூட்டானுக்கு விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளது. அதேபோல இதற்கு பதிலாக மேற்கு பூட்டானில் டோக்லாம் அருகே உள்ள சில பகுதிகளை சீனாவுக்கு பூட்டான் விட்டுக்கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் டோக்லம் பீடபூமி மற்றும் '3 சந்திப்பு புள்ளி' ஆகிய இடங்களை கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துவிடும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏற்கெனவே மோதல் போக்கு இருக்கும் நிலையில் சீனா இந்த கட்டுப்பாட்டை கையில் எடுத்தால், இந்தியாவுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டுடன் இணைக்கும் சிலிகுரி வழித்தடத்தை முடக்க சீனா சதி செயல்களை செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
எனவேதான் இந்த விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பூட்டானுடன் இந்தியா சீரான ராஜதந்திர உறவுகளை கொண்டிருந்தாலும் கூட எல்லை விஷயத்தில் பூட்டானை, சீனா தூண்டி விடுகிறது. இதை சரிசெய்ய தற்போது இந்தியாவிடம் ஒரேயொரு துருப்பு சீட்டுதான் இருக்கிறது. அதாவது பூட்டானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், 'தங்களது தேசிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி சீனாவின் முயற்சிகளை இந்தியா தோற்கடிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications