வழிக்கு வந்த சீனா.. இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு விடிவுகாலம்! இப்படியே இருந்தா நல்லா இருக்கும்
டெல்லி: ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு தேவையான 'அரிய காந்தங்களை' ஏற்றுமதி செய்து வந்த சீனா, திடீரென ஏற்றுமதியை நிறுத்தியிருந்தது. இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அரிய காந்தங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு 'அரிய காந்தங்கள்' மிக முக்கியமானதாகும். இதனை சீனாதான் உற்பத்தி செய்து, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. ஆனால் டிரம்ப் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக இந்த ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்திருந்தது. சீனாவின் இந்த பதிலடியால் டிரம்ப் ஜர்க் ஆக.. சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

மறுபுறம் இந்திய ஆட்டோமொபைல் துறையும், சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில், 10 நிறுவனங்களுக்கு அரிய காந்தங்களை விற்க, சீன அரசு 'ஓகே' சொல்லும் நிலையில் இருக்கிறது என்றும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் மோட்டார், ஜன்னல்கள், கண்ணாடிகள், இருக்கைகள் தொடங்கி எண்ணெய் பம்ப் சென்சார்கள், ஏர் கண்டிஷனிங், ஸ்பீக்கர்கள் வரை உற்பத்தி செய்ய இந்த காந்தங்கள் தேவை. சிம்பிளாக சொல்வதெனில், இந்த காந்தங்கள் இல்லை என்றால், கார்களை உற்பத்தி செய்ய முடியாது. நம்மிடம் ஜூன் மாதம் பாதி வரை, கார்களை உற்பத்தி செய்வதற்கான அரிய காந்தங்கள் 'ஸ்டாக்' இருக்கின்றன. விரைவில் இதுவும் தீர்ந்துவிடும். எனவேதான் மத்திய அரசை, ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் நாடியிருந்தன.
ஒருவேளை விரைவாக காந்தங்கள் கிடைக்கவில்லை எனில், அதன் பாதிப்பு தீபாவளி வரை கூட எதிரொலிக்கும். ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, அதைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு என தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள்தான் இருக்கிறது. இதற்காக வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான் சிறந்த காலம். ஆனால் கையில் சரக்கு இல்லாமல் எப்படி உற்பத்தி செய்ய முடியும்? இதை நினைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தலைமேல் துண்டை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கின்றன.
சரி ஏன் இந்த அரிய காந்தங்களுக்கு உலகமே சீனாவை சார்ந்திருக்கிறது? 'என்ன வளம் இல்லை திருநாட்டில்!' என்று சொல்கிறோமே, நம்மால் இதை உருவாக்க முடியாதா? என்று கேள்விகள் எழலாம்.
வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் இல்லாத வளம் கிடையாது. எனவே, நாமும் இந்த காந்தங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இப்போது முயற்சித்தால் குறைந்தது 15 ஆண்டுகளாவது ஆகலாம். எனவே சீனாவிடம் வாங்கும், அதே நேரத்தில் நாம் பக்காவாக பிளான் செய்து, காந்தங்களை உற்பத்தி செய்ய தொடங்கினால், அடுத்த சீனாவாக நம்மால் உயர முடியும்.
ஏன் 15 ஆண்டுகள் ஆகும்? என்று சந்தேகம் எழலாம். காரணம் இந்த அரிய காந்தங்களை பிரித்தெடுக்க நிறைய செலவாகும். இதிலிருந்து ஆபத்தான கழிவுகள் வெளியேறும். இந்த கழிவுகள் சரியாக மேலாண்மை செய்யப்படவில்லை எனில், சுற்றுசூழலில் பரவி, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மட்டுமல்லாது, திறமையான தொழிலாளர்களும் தேவை. இந்தியாவில் தொழிலாளர்களுக்கு பஞ்சம் கிடையாது. ஆனால், அவர்களை திறமையானவர்களாக மாற்றுவதில்தான் சிக்கல் இருக்கிறது. ஆக இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதால்தான், அரிய காந்தங்களை இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போகிறது.












Click it and Unblock the Notifications