சீனாவின் ஆய்வகமாகவே மாறிய பாகிஸ்தான்.. ஆயுதங்களை டெஸ்ட் செய்தது அம்பலம்! இந்திய ராணுவம் பகீர்
டெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களில் 81 சதவீதம் சீனாவில் இருந்து வந்தவை என்றும் சீனா தனது ராணுவ தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் "லைவ் லேப்" போல் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டதாக இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பாஹல்கமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துரை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத தளங்களைக் குறிவைத்துத் தாக்கியது.

ஆபரேஷன் சிந்தூர்
இந்த இந்தியப் பதிலடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உட்படப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் சில காலம் தொடர்ந்தது. அப்போது எல்லைப் பகுதிகளை பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற போதிலும் அதை இந்தியா முறியடித்தது
இந்திய ராணுவம்
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி (திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை) சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஆபரேஷன் சிந்துரில் இருந்து நாம் கற்றுக்கொள்ளச் சில பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து இலக்கு உறுதி செய்தோம். மொத்தம் 21 இலக்குகள் அடையாளம் காணப்பட்டன. அதில் 9 இலக்குகளைத் தாக்க முடிவு செய்தோம். எந்த 9 இடங்களைத் தாக்கலாம் என்பது குறித்த முடிவு கடைசி சில மணி நேரத்தில் எடுக்கப்பட்டது" என்றார்.
சீனா பாகிஸ்தான் உறவு
சீனா பாகிஸ்தான் குறித்துப் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், "சீனா- பாகிஸ்தான் உறவு என்பது வழக்கமான ஆயுதப் பரிமாற்றங்களைத் தாண்டி இருந்தது. பாகிஸ்தானுடன் உடனான உறவை ஒரு வாய்ப்பாகச் சீனா கருதுகிறது. உண்மையான மோதல் ஏற்படும்போது தனது ஆயுதம் எப்படிச் செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்யும் கூடமாகவே பாகிஸ்தானைச் சீனா பார்க்கிறது.
சீனாவின் ஆய்வகம் தான் பாகிஸ்தான்!
எங்களுக்கு ஒரு எல்லை மற்றும் இரண்டு எதிரிகள் இருந்தனர். உண்மையில் மூன்று எதிரிகள் எனச் சொல்லாம். பாகிஸ்தான் பொதுவெளியில் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்குச் சாத்தியமான அனைத்து ஆதரவையும் சீனா வழங்கியது. பாகிஸ்தானிடம் உள்ள ராணுவத் தளவாடங்களில் 81 சதவீதம் சீனாவில் இருந்து வந்தவை. சீனா தன்னுடைய ஆயுதங்களைச் சோதிக்க நினைக்கிறது. பாகிஸ்தான் அவர்களுக்கு நேரடி ஆய்வகமாகக் கிடைக்கிறது. துருக்கியும் கூட கணிசமான ஆயுதங்களை வழங்கியது. சீனாவின் ஆயுதங்கள் பாகிஸ்தான் செல்வதால் நமக்கு ஒரு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை" என்றார்.
கடந்த 2015 முதல் பாகிஸ்தானுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களைச் சீனா விற்பனை செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2020 - 2024க்கு இடையில், சீனா உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்தது. இந்த ஏற்றுமதியில் சுமார் இரண்டு பங்கு அல்லது 63 சதவீதம் பாகிஸ்தானுக்குச் சென்றது. இதன் மூலம் சீனாவிடம் இருந்து அதிகளவில் ஆயுதங்களை வாங்கும் நாடாக பாகிஸ்தான் மாறியது.












Click it and Unblock the Notifications