"ஏழைகளில் அது என்ன உயர்சாதி ஏழைகள்? தகுதியும், திறமையும் இப்போ என்ன ஆச்சு!" முதல்வர் ஸ்டாலின் கேள்வி
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறும் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது பலரும் கூட இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

சமூக நீதி மாநாடு
டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசியளவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சமூகநீதியில் அக்கறை கொண்ட பெருமக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்! ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி, நம்மை எல்லாம் இணைத்துள்ளது!

ரிகச்சினை ஒன்று தான்
மாநிலத்தின் முதலமைச்சர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் - மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - முன்னாள் நீதியரசர்கள் - மூத்த வழக்கறிஞர்கள் - இணைந்துள்ளோம்.. சமூகநீதியைக் காக்கும் கடமை, நமக்குத்தான் இருக்கிறது! அதனால்தான் இணைந்துள்ளோம். சமூகநீதியை அடையவேண்டும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒருசில மாநிலங்களின் பிரச்னையும் அல்ல. இது, இந்திய சமூக அமைப்புமுறைச் சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சினை! ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்னை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு!

சமூக நீதி தான் மருந்து
எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை - அடிமைத்தனம் - அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்த அந்தச் சாதியே பயன்படுகிறது. அதுதான் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக் கருத்தியல்! இந்தச் சமூகநீதிக் கருத்தியலும் யார் எந்த நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றியும் பலனும் இருக்கும். சமூகரீதியாக - கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி!

சமூகரீதியாகவும் - கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள்
சமூகரீதியாகவும் - கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவில் 'socially and educationally' என்பதுதான் வரையறையாக உள்ளது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை! இந்தத் திருத்தத்துக்கு காரணமான மாநிலம் அன்றைய சென்னை மாகாணம்!

பாஜக அரசு
இந்தத் திருத்தத்துக்குக் காரணமான தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும்! ''சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்! இந்த திருத்தத்துக்குக் காரணம், ''happenings in madras''தான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு. அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். 'Socially and educationally' என்பதில் economically என்பதை வஞ்சமாக சேர்த்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

அதென்ன உயர்சாதி ஏழைகள்?
Economically - அதாவது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்துவிட்டார்கள் பா.ஜ.க.வினர். பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல. இன்று ஏழையாக இருப்பவர் - நாளை பணக்காரர் ஆகலாம். இன்று பணக்காரராக இருப்பர் - நாளையே ஏழை ஆகலாம். பணம் இருப்பதையே ஒருவர் மறைக்கலாம். எனவே இது சரியான அளவுகோல் அல்ல. உயர்சாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பா.ஜ.க. அரசு. இது சமூகநீதி அல்ல. ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியாகுமே தவிர - சமூகநீதியாகாது. ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும் தானே இருக்க முடியும்? அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா?

எதிர்க்கிறோம்
அதனால்தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரைச் சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் வன்மமான எண்ணத்துக்கு அதிகம் விளக்கம் சொல்லத் தேவையில்லை.

தகுதி, திறமை என்ன ஆனது
இடஒதுக்கீடு மூலமாக அனைத்து சமூக மக்களும் படித்துவிடுகிறார்கள் - வேலைக்கு போய்விடுகிறார்கள் என்ற வன்மம்தான் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்ல வைக்கிறது. 10 விழுக்காடு இடஒதுக்கீடு தருவதால் தகுதி போகாதா? திறமை போகாதா? 100 ஆண்டுகளுக்கு முன்னால் - 200 ஆண்டுகளுக்கு முன்னால் - உயர்சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது அல்லவா? அதனை உருவாக்க நினைக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications