தேங்காய் எண்ணெய் கம்பெனிகளின் புத்திசாலித்தனமான வாதம்.. மத்திய அரசுக்கு ரூ.159 கோடி வருவாய் அவுட்
டெல்லி: தேங்காய் எண்ணெய், சமையலுக்கும், தலைமுடியில் தேய்க்கவும் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் சமையல் எண்ணெய்க்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், கூந்தல் பராமரிப்புக்கான தயாரிப்பு என்ற அடிப்படையில் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாக கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் தலைமுடியில் தேய்க்கும் அழகு சாதன எண்ணெயாகவும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் சமையலுக்கு பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக பாக்கெட்டுகளில் அடைத்துவிற்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், கூந்தல் பராமரிப்புக்கானதாக தாயரித்து விற்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.வரியும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த 2009-ம் ஆண்டில் சுங்க, கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை மத்திய கலால் வரி சட்டத்தின் 1513-வது தலைப்பின்கீழ் சமையல் எண்ணெய்யாக வகைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தது. இதன்படி பார்த்தால் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க்கும் 5 சதவீதமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியது வரும் என்ற நிலை உருவானது.
ஆனால் அதை ஏற்காத மத்திய வருவாய்த்துறை, மத்திய கலால் வரி சட்டத்தின் 3305-வது தலைப்பின்கீழ், அதை கூந்தல் பராமரிப்பு பொருளாக வகைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரு விதமாக தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், பெரும்பாலும் தலைமுடியில் தேய்ப்பதற்கே விற்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் வருவாய்த்துறை சார்பில் வாதிட்டது. ஆனால், 'பாராசூட்' தேங்காய் எண்ணெயை தயாரிக்கும் மதன் அக்ரோ நிறுவனம், தேங்காய் எண்ணெய் என்பது எந்த பாக்கெட்டில் அடைத்தாலும் அது அடிப்படையில் சமையல் எண்ணெய்தான் என்று வாதிட்டது..
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வருவாய்த்துறையின் வாதத்தை நிராகரித்து தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் தீர்ப்பில் கூறுகையில், "சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாக வகைப்படுத்தலாம். பொருட்களுக்கு வரியை வகைப்படுத்துவது, யூகத்தின் அடிப்படையில் அல்லாமல், பொதுவான பேச்சு வழக்கு மற்றும் வர்த்தக நடைமுறைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம் அகும். எனவே தேங்காய் எண்ணெயை அழகு சாதன பொருளாக பயன்படுத்துவதால் மட்டுமே அதை கூந்தல் பராமரிப்பு பொருளாக கருத இயலாது. சிறிய பாக்கெட்டுகள் சமையலுக்கும், தலைமுடியில் தேய்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பாக்கெட்டின் அளவை வைத்து மட்டும் அதை வகைப்படுத்த இயலாது" என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதன் மூலம், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், அரசு அமைப்புகள் இடையே நீடித்து வந்த 15 ஆண்டுகால வரி சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனிமேல் தேங்காய் எண்ணெய்க்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி என்பதால், பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். ஆனால், மத்திய அரசுக்கு கூந்தல் பராமரிப்பு பொருளுக்கான ஜி.எஸ்.டி. மூலம் ஓராண்டுக்கு கிடைக்க வேண்டிய ரூ.159 கோடி வருவாய் இனி கிடைக்காமல் போகும்.












Click it and Unblock the Notifications