14 மாதம் ஆச்சு.. ரஷ்யா போகிற மோடிக்கு மணிப்பூர் போக நேரம் கிடைக்கலையா? காங்கிரஸ் கடும் தாக்கு
டெல்லி: இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா சென்றிருக்கிறார். அதேநேரம், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அசாம் மற்றும் மணிப்பூருக்கு சென்றிருக்கிறார். இது குறித்து பிரதமர் மீது காங்கிரஸ் விமர்சனத்தை அடுக்கியுள்ளது.
மாநாடு: ஆண்டுதோறும் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெறும். கடைசியாக 2021ம் ஆண்டு டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் புதின் பங்கேற்றிருந்தார். இதனையடுத்து 2022 மற்றும் 2023 என இரண்டு ஆண்டுகளும் இந்த மாநாடு நடக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருக்கிறார்.

விமர்சனம்: இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அசாம் மற்றும் மணிப்பூர் சென்றிருக்கிறார். இந்த இரண்டு பயணங்களையும் ஒப்பிட்டு காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “பயாலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல இன்னும் நேரம் கிடைக்கவில்லை போலும்” என்று விமர்சித்திருக்கிறார்.
ரஷ்யா: "பிரதமர் மோடி ரஷ்யா செல்லும் வேளையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இன்று அசாம் மற்றும் மணிப்பூருக்கு செல்கிறார். பிரதமர் உக்ரைன்-ரஷ்யா போரைதான் நிறுத்த அங்கு செல்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லக்கூடும். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்ததற்கு பிறகு, அங்கு செல்ல பிரமர் மோடிக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. அம்மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்களைக்கூட அவர் சந்திக்கவில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
ராகுல் பயணம்: இன்று காலை அசாம் சென்ற ராகுல் காந்தி, சில்சாரில் உள்ள நிவாரண முகாம்களில் மக்களை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் அம்மாநில ஆளுநரையும் ராகுல் காந்தி சந்தித்து பேச இருக்கிறார். கடந்த ஓராண்டில் ஏற்கெனவே இரண்டு முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு ராகுல் காந்தி சென்றிருக்கிறார். அந்த வகையில் இது அவருடைய மூன்றாவது பயணமாகும்.
மோடி பேச்சு: கடந்த வாரம் மாநிலங்களவையில் இது குறித்து பேசிய மோடி, “மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப அரசு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 11,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது” என்று கூறியிருந்தார். ராகுல் காந்தி மணிப்பூருக்கு செல்லும் நிலையில், பிரதமரின் உரை சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.
பின்னணி: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 14 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேரை காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட பழங்குடி மக்கள் 47 சதவிகிதமும், மெய்தி உள்ளிட்ட பழங்குடியினர் அல்லாத மக்கள் 53 சதவிகிதமும் இருக்கின்றனர். இங்கு பழங்குடி மக்களுக்கு என சில சிறப்புரிமைகள் இருக்கிறது. அதாவது இம்மாநிலத்தில நிலங்களை வாங்க இம்மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. எனவே 53 சதவிகிதமாக உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
தொடக்கப்புள்ளி: சமீபத்திய மணிப்பூர் சட்டமன்ற தேர்தலின்போது, மெய்தி மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. எதிர்பார்த்தபடி அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது. இதுதான் வன்முறைக்கான தொடக்கப்புள்ளி.












Click it and Unblock the Notifications