ஜியோ+ஏர்டெல்+வோடஃபோன் ஒரே நேரத்தில் கட்டண உயர்வு! அதெப்படி திமிங்கலம்? காங்கிரஸ் சரமாரி கேள்வி
டெல்லி: சமீபத்தில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. இந்நிலையில், இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இது தவிர பிஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் சேவையை வழங்கி வருகின்றன. இப்படி இருக்கையில் சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவித்தன.

முதலில் ஜியோ தனது கட்டணத்தை 12-27 சதவிகிதம் வரை உயர்த்தியிருந்தது. இதனை தொடர்ந்து, ஏர்டெல்லும் தனது கட்டணத்தை உயர்த்தியது. இறுதியாக வோடஃபோன் ஐடியாவும் தனது கட்டணத்தை உயர்த்தியது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே கணிப்புகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 112 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கிறது. இதில் 40 விழுக்காட்டை ஜியோவும், 33 சதவீதத்தை ஏர்டெல்லும், 18 விழுக்காட்டை வோடபோனும் வைத்திருக்கின்றன. இந்த கட்டண உயர்வால் இந்திய மக்கள் கூடுதலாக ரூ.34,824 கோடியை செலவு செய்ய நேரிடும் என்று புள்ளி விவரங்கள் எச்சரித்துள்ளன.
இப்படி இருக்கையில், இந்த கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மத்திய அரசு மீது சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரந்தீப் சிங், “நாடு முழுவதும் 91%க்கும் அதிகமான சந்தாதாரர்களை வைத்துள்ள 3 நிறுவனங்கள், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தங்கள் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ 48 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது, ஏர்டெல் 39 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது, வோடபோன் ஐடியா 22 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கையின்படி, செல்போன் நிறுவனங்கள் ஒவ்வொரு தங்கள் வாடிக்கையாளரிடமிருந்தும் மாதம் ரூ.152.55 கோடி லாபம் பார்க்கின்றன.
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் முதலீடு, வருமானம், சேவை அளவு ஆகியவற்றில் மாறுபாடு உள்ளது. ஆனால், கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15% முதல் 20% வரை உயர்த்தி ஒரே மாதிரி அறிவித்தது எப்படி?
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 3 செல்போன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்தது எப்படி? நாட்டில் 92% சேவை வழங்கும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது எப்படி? 3 நிறுவனங்களும் 48 மணி நேரத்திற்குள் ஒரே மாதிரியாக கட்டண உயர்வை அறிவித்தது எப்படி?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications