மக்களே ஸ்வீட் நியூஸ்.. வருகிற நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையுமாம்.. மத்திய அமைச்சர் உறுதி!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வருகிற நாட்களில் குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொடர்ந்து விஸ்வருபமெடுத்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஒரு மாத காலமாக அதிகரிக்காமல் ஓய்வெடுத்துள்ளது.

விஸ்வரூபமெடுத்த விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், மக்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாதமாக விலை உயரவில்லை
கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின்னர் விலை உயராமல் அப்படியே நின்றது. இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக விலை அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக 2 முறை விலை குறைக்கப்ட்டது. மேலும் சமையல் சிலிண்டர் விலையும் ரூ.10 குறைக்கபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேர்தல்தான் காரணமா?
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடப்பதால் அதனை கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் இவற்றின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விடும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாட்களில் குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மேலும் விலை குறையும்
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலைகள் இப்போது குறையத் தொடங்கியுள்ளன. வருகிற நாட்களில் இவற்றின் விலை மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் மக்களை சென்றடைய விரும்புகிறோம்' என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.












Click it and Unblock the Notifications