"இது வளர்ச்சி பாரதம் இல்லை.. விபரீத பாரதம்.!" திமுக எம்பி கனிமொழி அடுத்து கேட்ட ஒரே ஒரு கேள்வி
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி- ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வருகிறது. இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டும் மசோதாக்களுக்குப் பெயர் வைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய கனிமொழி, இது வளர்ச்சி பாரதம் இல்லை.. விபரீதப் பாரதம் என்றும் விமர்சித்தார்.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்தத் திட்டத்திற்குப் பதிலாக விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பெயர் மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். காந்தியின் பெயரை நீக்கவே மத்திய அரசு இதைச் செய்வதாகக் காங்கிரஸ் சாடியது. மேலும், இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டத்தையும் அறிவித்துள்ளது. காந்தி மீது இருக்கும் வன்மம் காரணமாகவே மத்திய அரசு பெயரை மாற்றுவதாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அங்கு விவாதம் நடந்து வருகிறது. இந்த மசோதா மீது திமுக எம்பி கனிமொழி இன்று லோக்சபாவில் பேசினார். அப்போது மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன் என்று கனிமொழி கேள்வி எழுப்பினார். இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டும் மசோதாக்களுக்கு பெயர் வைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய கனிமொழி, தேர்தல் வந்தால் மட்டுமே மத்திய அரசுக்குத் தமிழ் மொழி நினைவுக்கு வருகிறது என்று சாடினார்.
மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் என்றதும் தமிழனாகப் பிறக்கவில்லையே என வருத்தப்படுவீர்கள் எனச் சாடிய அவர், இது வளர்ச்சி பாரதம் இல்லை.. விபரீதப் பாரதம் என்றும் விமர்சித்தார். இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டும் மசோதாக்களுக்குப் பெயர் வைக்கப்படுகிறதோ தவிரத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எந்தவொரு மசோதாவுக்கும் பெயர் வைக்கப்படுவதில்லை என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications