வேலையை காட்டிய டிரம்ப்.. மோடியிடம் பேசிய சில மணி நேரங்களில் இந்தியா, சீனாவுக்கு வார்னிங்
டெல்லி: அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்புடன் நேற்று பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். இந்த நிலையில், புளோரிடாவில் குடியரசுக் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவை கடுமையாக சாடி பேசியிருக்கிறார். இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய வரியை உருவாக்குபவர்களாக உள்ளனர். அவர்களை அந்த வழியில் செல்ல எனது அரசு அனுமதிக்காது என்று கூறினார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று இருக்கிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதே அதிரடியாக பேசி வந்த டிரம்ப், தற்போது பதவியில் அமர்ந்த பிறகும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக அமெரிக்க நலன்களுக்கு மட்டுமே இனி முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பேசி வரும் டிரம்ப், அதை உறுதி செய்யும் விதமாக பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அதற்கு பதிலடியாக 100 சதவீதம் வரி விதிப்பேன் என்றும் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் புளோரிடாவில் குடியரசுக் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா, சீனாவை கடுமையாக சாடி பேசியிருக்கிறார். டிரம்ப் கூறுகையில், " இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய வரியை உருவாக்குபவர்களாக உள்ளனர். அவர்களை அந்த வழியில் செல்ல எனது அரசு அனுமதிக்காது. இனி ஒரு போதும் நாம் அதை அனுமதிக்க போவது இல்லை.
ஏனெனில் அமெரிக்காவைத்தான் நாம் முதன்மையானதாக வைக்க போகிறோம் பிரிக்ஸ் நாடுகள் அவர்களின் நலனுக்காக செயல்படுகிறார்கள். அது நமக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. எனவே, நமக்கு தீங்கை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு வரியை விதிக்க போகிறோம்.. சீனா மிகப்பெரிய அளவில் வரி விதிக்கும் நாடாக உள்ளது.
இந்தியா, பிரேசில் மற்றும் இன்னும் பல நாடுகள் இப்படி இருக்கின்றன. இனி இப்படி நடக்கப்போவதை நாம் அனுமதிக்க போவது இல்லை. ஏனெனில் அமெரிக்காவைத்தான் முதன்மையாக நாம் வைக்க போகிறோம்" என்றார். டிரம்ப் இவ்வாறு பேசும் போது குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பரித்தனர்.
பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் விரைவில் சந்திக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் இத்தகைய கருத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார். முன்னதாக அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அவருடன் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தார்.
இந்த உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் வெள்ளை மாளிகை வருகை தர வாய்ப்புள்ளது என்று பேசினார். இதனால், இரு தலைவர்களும் சந்திக்கப் போவது உறுதியாகியுள்ள சூழலில் தான் டிரம்ப் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications