அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் சேர்க்கப்படுவாரா? மறுக்காத எடப்பாடி பழனிசாமி!
டெல்லி: அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா சேர வாய்ப்பில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் விரைவில் அமமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் பாமக அன்புமணி தரப்பு உடனான கூட்டணியை உறுதி செய்த சில மணி நேரங்களிலேயே எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் சேர்க்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமித்ஷாவிடம் கூட்டணி குறித்தும் எதுவும் பேசவில்லை.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து மட்டுமே என்னிடம் கேட்டறிந்தார். யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பதை வெளிப்படையாக பேச முடியாது. அதேபோல் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா சேர்வதற்கு வாய்ப்பில்லை. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவாரா என்ற கேள்விக்கு, ஹேஷ்யமாக சொல்வதற்கு எதுவுமில்லை. சில கட்சிகள் எங்களுடன் வரும்.. பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனையெல்லாம் வெளிப்படையாக பேச முடியாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணத்தின் போது ஓபிஎஸ் நிச்சயம் சேர்க்கப்பட மாட்டார் என்று கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். இதனால் இன்னும் சில வாரங்களில் என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வருவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications