கை தட்டியதும் கொரோனா வைரஸ் பறந்து போயிருச்சா.. நாசா பெயரில் உலா வந்த போலி செய்தி.. இதுதான் உண்மை!
நாசா பெயரில் போலி செய்தி ஒன்று வெளியானது
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்த ஜனதா கர்பியூ எனப்படும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தவுடனேயே கொரோனா வைரஸ் பறந்து போய் விட்டதாக ஒரு வாட்ஸ் ஆப் தகவல் நேற்று காட்டுத் தீ போல பரவியது. நாசாவின் பெயரால் பரவிய இந்த தகவல் அப்பட்டமான போலி செய்தி என்பது உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின்பேரில் மக்கள் தாங்களாகவே முன்வந்து இந்த ஊரடங்கில் கலந்து கொண்டனர். இதனால் நேற்று நாடே முடங்கிப் போனது. மேலும் மாலை 5 மணிக்கு பிரதமரின் கோரிக்கையின் பேரில் மக்கள் கைதட்டல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் மருத்துவப் பணிகளில் இரவு பகலாக அயராமல் பாடுபடும் துப்புறவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என சகல துறையினருக்கும் நன்றி கூறும் விதமாக இந்த கைத்தட்டலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

வதந்திகள்
இதுவரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர்தான் வாட்ஸ்ஆப் மூலமாக சிலர் வதந்திகளை கிளப்ப ஆரம்பித்தனர். கைத்தட்டி முடித்ததும் வைரஸ் போய் விட்டதாக இவர்களே அனுமானித்துக் கொண்டு பிரதமருக்கு நன்றி சொல்லியும், பிரதமர் சாதனை படைத்து விட்டார் என்றும் கலந்து கட்டி வதந்திகளை வாட்ஸ் ஆப் மூலம் வைரஸை விட படு வேகமாக பரப்ப ஆரம்பித்து விட்டனர்.

முயற்சிக்கு நன்றி
இதற்கு நாசாவின் பெயரையும் கூட இழுத்து வந்து விட்டனர். அதாவது நாசாவே இதுதொடர்பாக உறுதிப்படுத்தியுள்ளதாக வார்த்தையை சேர்த்துக் கொண்டு கிளப்பி விட்டனர்... அந்த செய்தியில், "நாசாவிலிருந்து தற்போது வந்துள்ள செய்தி. நாசாவின் சாட்டிலைட் வீடியோக்கள் மூலம் லைவாக எடுக்கப்பட்ட தகவலின்படி இந்தியாவை விட்டு கொரோனா வைரஸ் போய் விட்டது. இந்தியா மார்ச் 22ம் தேதி எடுத்த இந்த முயற்சிக்கு நன்றி" என்று அந்த செய்தி கூறியது.

ஒலி அலைகள்
அத்தோடு நிற்கவில்லை வதந்தியாளர்கள். "கொரோனா வைரஸ் இங்கிருந்து போனதன் சான்றாக, காஸ்மிக் லெவல் ஒலி அலைகள் உருவாகியுள்ளன. இதை நாசாவின் எஸ்டி13 அலை கண்டு பிடிக்கும் கருவியானது, கண்டுபிடித்து பதிவு செய்துள்ளது. மேலும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பயோ சாட்டிலைட் மூலமாக, COVID-19 வைரஸானது கரைந்து காணாமல் போனதும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அந்த வதந்தி நீண்டது.

சத்தம்
பிறகென்ன இந்த வதந்தியை பலரும் பார்வர்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்... ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாமே போலியானது... இப்படி எதுவுமே நடக்கவில்லை... உண்மையில் பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத இடத்தில் உருவாகும் சத்தத்தை நாசாவால் ஒலிப்பதிவு செய்ய இயலாது. அதற்கான வாய்ப்பும் இல்லை... அறிவியல் பூர்வமாகவும் , வேறு விதமாகவும் இதற்கு வாய்ப்பு இல்லை.

பார்வர்டு மெசேஜ்
அடுத்து எஸ்டி 13 அலைகளை கண்டுபிடிக்கும் கருவி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒன்றை நாசா கண்டுபிடிக்கவே இல்லை... வைத்திருக்கவும் இல்லை... நாசாவிடம் மின் காந்த ஸ்பெக்ட்ரம் மட்டுமே இருக்கிறது... ஆனால் இவர்கள் சொல்வது போல எந்தக் கருவியும் இல்லை... இதுதான் உண்மை... இந்த வதந்தி மட்டுமல்ல இப்படி ஏகப்பட்ட வதந்திகள் வைரஸை விட வேகமாக பரவிக் கொண்டுள்ளன. மக்கள் இதையெல்லாம் படித்து உணர்ந்து உண்மை தெரிந்து பார்வர்ட் செய்தால் அது மனிதகுலத்துக்கு செய்யும் பெரிய நன்மையாகும்!!












Click it and Unblock the Notifications