அவங்க செஞ்சது பெரிய தியாகம்.. கார்கில் போரில் நண்பர்களை இழந்த கர்னல் விஜய் குமார் பெருமிதம்
டெல்லி: நாடு முழுவதும் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியாவின் வெற்றிக்காக போராடி உயிர் நீத்தவர்களை அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை துளி கூட விட்டுக்கொடுக்காமல் போராடியவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கர்னல் விஜய் குமார் கார்கில் போரின் போது பெற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இவருக்கு சிறுவயதிலிருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்பது பெருங்கனவு. எதிர்பார்த்ததை போலவே அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தார். ஆனால் இவருக்கு போஸ்டிங் அருணாச்சலப் பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. இவருடன் பயிற்சி பெற்ற நண்பர்கள் கார்கில் பகுதியில் பணியமர்த்தப்பட்டனர்.

இவருக்கு கார்கில் பகுதிக்கு போக வேண்டும் என்று விருப்பம். ஆனால், பாகிஸ்தான் அத்துமீறலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, அருணாச்சலப் பிரதேசத்தில் விஜய் குமார் தலைமையிலான வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டிருந்தனர். மே மாதம் தொடங்கிய கார்கில் யுத்தம் ஜூலை வரை நீடித்தது. இறுதியாக ஆக்கிரமிப்பாளர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.
ஆனால் அதற்கு பதிலாக 527 வீரர்களின் உயிரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த 527 வீரர்களில் கர்னல் விஜய் குமாருடன் பயிற்சி பெற்றவர்களும் சிலர் இருக்கின்றனர். இது குறித்து நினைவுகூறிய அவர்,
"நான் அருணாச்சலத்தில் பணியமர்த்தப்பட்டபோது அதிர்ஷ்டமற்றவன் என்று நினைத்துக்கொண்டேன். கார்கில் மாவட்டத்தில் போஸ்டிங் போடப்பட்ட எனது பேட்ச்மேட்களுடன் சேர விரும்பினேன். சீனாவின் அச்சுறுத்தல் இருப்பதால் அருணாச்சலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று எனது கட்டளை அதிகாரி எனக்கு உத்தரவிட்டிருந்தார்.
இப்படி நடந்து இரண்டு மாதங்களில் கார்கில் யுத்தம் தொடங்கியது. எனது நண்பர்களை நான் இழந்துவிட்டேன். இருப்பினும் அவர்கள் செய்த தியாகத்திற்காக நான் பெருமைப்படுகிறேன். அவர்களுடன் சேர்ந்து நான் பயிற்சி பெற்றதை தியாகத்துடன் நினைவுகூர்கிறேன். அவர்களுக்கு எனது வீர வணக்கம்" என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தின் வழியாக இந்தியா-பாகிஸ்தானின் சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. இந்த பகுதி மிகுந்த குளிரான இடமாகும். எனவே இங்கு பணியாற்ற பிரத்யேக பயிற்சிகள் அவசியமாகின்றன. எந்த சூழல் இருந்தாலும், காலநிலை எப்படி மாறுபட்டாலும் கொஞ்சமும் அசராது இந்திய வீரர்கள் இந்த பகுதியை பாதுகாத்து வந்தனர்.
இப்படி இருக்கையில் கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் திடீரென பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிலர் எல்லைக்கோட்டை மீறி இந்தியாவுக்குள் நுழைந்தனர். மட்டுமல்லாது அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்களும் அந்நாட்டு ராணுவ தளபதி முஷரப்பின் ஆதரவுடன் நுழைந்தனர். உடனே அலர்ட் ஆன இந்தியப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியது. போர் வெடித்தது. கார்கில் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று வெளி உலகுக்கு பாகிஸ்தான் அறிவித்து, தனக்கான பச்சாதாபத்தை தேட முயன்றது.
ஆனால் இதையெல்லாம் முறியடித்து மூன்று மாதங்கள் தீரமுடன் போராடி இந்தியா தனது எல்லையை பாதுகாத்துக்கொண்டது. இந்த வெற்றியின் 25வது ஆண்டைதான் இன்று நாடு முழுவதும் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.












Click it and Unblock the Notifications