ஜிஎஸ்டி வரி அடியோடு மாறுகிறது! அமைச்சரவை ஒப்புதல்! எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதிகரிக்கும்?
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரியின் சில அடுக்குகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அறிவிப்பைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு உள்ள மறைமுக வரி விதிப்பை சீரமைக்கும் நடவடிக்கை இது. இதன் மூலம் 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்படும்.
இதற்காக டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரியும் இதில் இருந்தார். பிகார் நிதி அமைச்சர் சாம்ராட் சௌத்ரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்த பரிந்துரை தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சீர்திருத்தங்கள்
ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தால் மாற்றங்கள் வரும். தற்போது 5% மற்றும் 18% அடுக்குகள் தொடரும். புதிய 40% அடுக்கு அறிமுகப்படுத்தப்படும். இது அதி ஆடம்பரப் பொருட்களுக்காக மட்டுமே. வரி விதிப்பில் இது புதிய அடுக்காக இருக்கும். இந்த புதிய விதிப்படி ஆயுள், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. அமைச்சர்கள் குழு இதை பரிந்துரைத்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து கருத்துகளையும் பரிசீலிக்கும். மாநிலங்களின் வருவாய் இழப்பீடு குறித்த கேள்விகள் எழும். அவையும் கவனமாக ஆராயப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான மாற்றங்கள் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்கள்
மத்திய அரசு தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை மட்டுமே வைத்திருக்க முன்மொழிந்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களுக்கான வரியை 18% ஆகக் குறைக்கவும் அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல, 12% அடுக்கில் உள்ள பொருட்கள் 5% அடுக்கிற்கு மாற்றப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி - விலையில் மாற்றம்
இருப்பினும், புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற பொருட்களை உள்ளடக்கிய புதிய 40% அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முன்மொழிவை பரிசீலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு ஜிஎஸ்டி வசூலில் சிறிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக்கபூர்வமான மற்றும் உள்ளடக்கிய உரையாடலை உருவாக்க, அமைச்சர்கள் குழுவிடம் (GoM) ஒரு முன்மொழிவு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் - எந்தெந்த துறைகளுக்கு பயனளிக்கும்
இந்த நடவடிக்கை விவசாயம், ஜவுளி, உரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கும் என்று அரசு தரப்பு பதற்றம் தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற "பாவப் பொருட்கள்" புதிய 40% வரி அடுக்கிற்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விகிதம் புகையிலை உட்பட ஏழு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள், அதிக உழைப்பு தேவைப்படும் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள், அதே விகிதத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும். இதற்கிடையில், பெட்ரோலியப் பொருட்கள் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆட்சியின் வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும்.
பெரும்பாலும் இந்த வரி திருத்தம் காரணமாக பல அடிப்படை பொருட்களின் விலை குறையும். ஆனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.












Click it and Unblock the Notifications