தன்பாலின திருமணம்.. "சமூக உரிமைகளை எப்படி பெறுவார்கள்.." மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உலகின் வளர்ந்த நாடுகளும் கூட இதில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2018 வரை தன்பாலின ஈர்ப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்துள்ளது.. 2018இல் தான் தன்பாலின ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்ற வரலாற்றுத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்தது.

தன்பாலின திருமணம்: இந்தச் சூழலில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் தனியாக வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசும் கூட சமீபத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதில் தன்பாலின திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த மத்திய அரசு, இது வெறும் எலைட் மக்களின் பார்வை மட்டுமே என்றும் இந்த திருமணங்களை ஆதரித்து புது சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது என்றும் கூறப்பட்டது.
மேலும், அனைத்து மதங்களின் படியும் திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடப்பதாக இருக்க வேண்டும் என்றும் இதற்குத் தனிநபர் விருப்பம் என்ற அடிப்படையில் இதற்கு உரிமை கோர முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. மேலும், இதை பொதுவான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
உச்ச நீதிமன்றம்: இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்து வரும் நிலையில், நீதிபதிகள் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.. அதன்படி தன்பாலின ஈர்ப்பு தம்பதிகள் கூட்டாக வங்கிக் கணக்கைத் தொடங்குவது, காப்பீடுகளில் நாமினிக்களை பரிந்துரைப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்கும் வழிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது குறித்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் தான் சுப்ரீம் கோர்ட் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளது. தன்பாலின திருமண உரிமையை மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் இது பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர். தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காமல் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது குறித்து புதன்கிழமைக்குள் பதில் அளிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலிடம் கூறியது.

டி.ஒய்.சந்திரசூட்: இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், "நாங்கள் இந்த விவகாரத்தில் நுழைந்தால் அது அரசின் அதிகாரத்திற்குள் நுழைவதாக இருக்கும் என்ற உங்கள் கருத்தை ஏற்கிறோம். இதுபோன்ற உறவுகளில் அரசு என்ன செய்ய விரும்புகிறது? பாதுகாப்பு மற்றும் சமூக நலன் பற்றிய உணர்வு எப்படி உருவாக்கப்படுகிறது? அத்தகைய உறவுகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்" என்று கேள்வி எழுப்பினர்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் அரசே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றே மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து கூறி வருகிறார். இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டியது நாடாளுமன்றமே தவிர நீதிமன்றமல்ல என்று கூறும் அவர், அதேநேரம் இதை மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சினையாக மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த வாரம் முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசின் வாதமும் நீதிமன்ற கருத்துகளும் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications