அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை! மணிப்பூருக்கு பிரதமர் மோடி வரவேண்டும்.. ராகுல் காந்தி பரபர பேட்டி
டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இன்று நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் எனவும் இங்குள்ள சூழலை புரிந்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

ஒராண்டுக்கு மேலாகியும் மணிப்பூரில் தற்போது வரை இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது. பல இடங்களில் பதற்றம் குறையவில்லை. மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அங்குள்ள சூழலை ஆய்வு செய்து அமைதி திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
லோக்சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் தான், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றுள்ளார். கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
சுராசந்த்பூர் அடுத்த மந்தப் மற்றும் துய்பாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்துப் பேசினார். பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் உரையாடி, அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் வருவது மிகவும் அவசியம் என நான் உணர்கிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் பெருமை மிக்க மாநிலமாக மணிப்பூர் உள்ளது. மணிப்பூரில் பிரச்சினை இல்லை என்றால் பிரதமர் மோடி குறைந்த பட்சம் இரண்டு முறையாவது இங்கு வந்து இருப்பார்.
இவ்வளவு பெரிய சோகமான நிகழ்வு ஏற்பட்டு இருக்கும் சூழலில் பிரதமர் மோடி குறைந்தது 1-2 நாட்களாவது இங்கு மக்கள் சொல்வதை கேட்க வேண்டும். நான் இங்கு அரசியல் செய்வதற்காக வரவில்லை. மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான உதவியை செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. பிரதமர் மோடி இங்கு வரவேண்டும் என்பதை மணிப்பூர் மட்டும் இன்றி தேசமும் விரும்புகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications