ஜிடிபியில் உச்சம்.. கொண்டாடும் மத்திய அரசு! ஆனால் எங்கயோ இடிக்குதே! சந்தேகம் கிளப்பிய IMF
டெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், ஜிடிபி புள்ளி விவரங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) சந்தேகம் எழுப்பி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டையும் 4 ஆக பிரித்து, வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படும். அந்த வகையில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை முதல் காலாண்டு என்றும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை இரண்டாவது காலாண்டு என்றும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை மூன்றாவது காலாண்டு என்றும், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 4வது காலாண்டு என்றும் பிரிக்கப்படுகிறது.

ஐஎம்எஃப் ஆய்வறிக்கை
இதில், கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில், நாட்டில் உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் இந்த சாதனை நடந்திருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், ஜிடிபி புள்ளி விவரங்கள் குறித்து ஐஎம்எப் சந்தேகம் எழுப்பியிருக்கிறது. அதாவது ஐஎம்எஃப் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு அறிக்கை வெளியிடும்.
மத்திய அரசின் அறிக்கையில் சந்தேகம்
எந்தெந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? இந்த வளர்ச்சி உண்மையானதா? சர்வதேச பொருளாதார வளர்ச்சியுடன் இந்த நாடுகள் ஒத்து போகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஎம்எஃப் பொருளாதார வல்லுநர்கள் குழு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்று நேரடியாக ஆய்வை மேற்கொள்ளும். அப்படித்தான் சமீபத்தில் இந்தியாவிலும் ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில்தான், ஜிடிபி குறித்து மத்திய அரசு சொல்லியிருக்கும் தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
தரவரிசையின் விவரம்
ஒவ்வொரு நாடுகளும் கொடுக்கும் தகவல்களை, ஐஎம்எஃப் கவனமாக சரிபார்க்கிறது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் இருக்கிறது என்பதற்காக அதை வரிசைப்படுத்துகிறது.
- A - தரவரிசை
- B - தரவரிசை
- C - தரவரிசை
- D - தரவரிசை
முந்திய பாகிஸ்தான்
இதில் A - தரவரிசை கொடுக்கப்பட்ட, நாடுகள் வழங்கிய தகவல்கள் மிகவும் கச்சிதமானதாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளுக்கு இந்த தரவரிசை வழங்கப்படலாம். சில ஐரோப்பிய நாடுகள், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிக்கு B - தரவரிசை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு இந்த தரவரிசை வழங்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு கொடுத்த தகவல்கள், ஐஎம்எஃப் மேற்பார்வைக்கு போதுமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு எந்த இடம்?
C- தரவரிசை என்பது போதுமான அளவுக்கு டேட்டாக்கள் கிடைக்கவில்லை என்பதால் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் டேட்டாக்களை சேகரிப்பதிலும், அதை பகுப்பாய்வு செய்வதிலும் பிரச்சனை இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில், சில முக்கியமான துறைகள் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காமல் இருக்கின்றன. அதேபோல ஜிடிபி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு என்பது மிகவும் பழமையானதாக இருக்கிறது என்பதை குறிக்கவே ஐஎம்எஃப் சி தரவரிசையை பயன்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் கொண்டாடுவது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications