ஜம்மு காஷ்மீர் அணைகளில் தண்ணீரை திறந்த இந்தியா.. பாகிஸ்தானில் வெள்ள அபாய எச்சரிக்கை!
ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து செனாப் நதியில் இந்தியா நீரை திறந்து விட்டிருக்கிறது. இது பாகிஸ்தானில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்பாராத நீர் வரத்து காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் மீட்பு படைகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

கடந்த ஏப்.22ம் தேதி பஹல்காம் தாக்குதலையடுத்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இந்த ஒப்பந்தத்தின்படி செனாப் நதியில் எவ்வளவு தண்ணீர் போக வேண்டும் என்பதை பாகிஸ்தான்தான் தீர்மானிக்கும். ஆனால் சமீபத்தில் பெய் மழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது ஒப்பந்தம் கைவிடப்பட்டதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் நதியில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஏஎன்ஐ செய்தி ஊடகங்கள் உறுதி செய்திக்கின்றன.
ஏஎன்ஐ செய்தி ஊடகம் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரியாசியின் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, அதன் வழியாக நீர் சீறி பாய்வது தெரிய வந்திருக்கிறது. சலால் அணையின் இரண்டு மதகுகள் நேற்று மாலை 8:30 மணி முதல் 4:30 மணி வரை திறக்கப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியிருக்கிறது. அதேபோல பாக்லிஹார் அணையிலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நீர் பாகிஸ்தானில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் எழுந்திருக்கிறது. அதாவது பாகிஸ்தானில் உள்ள ஹெட் மராலாவில் செனாப் நதியின் நீர்மட்டம் சுமார் 3,100 கனஅடியிலிருந்து 28,000 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. இதனையடுத்து பஞ்சாப் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ளவர்களுக்கு அந்நாட்டு அரசு வெள்ள அபாய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. நீர் திறக்கப்படுவது பற்றி முன்கூட்டியே சொல்லப்படவில்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதாக சிந்து நதி அமைப்பு ஆணையத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தற்போது அவசரகால மீட்புக் குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.
கடந்த 1960ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. கடந்த மூன்று போர்களின் போது கூட இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படவில்லை. அதேபோல ஒப்பந்தத்தின்படி செனாப் மற்றும் பிற மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானதாகும். இதன் குறுக்கே உள்ள அணைகள் திறக்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஓகே சொல்ல வேண்டும். ஆனால் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இந்திய தன்னிச்சையாக இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக பாக் விமர்சித்துள்ளது.
மட்டுமல்லாது பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைக்கு தண்ணீரை இந்தியா ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் விமர்சித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications