2,800 கி.மீ.க்கு பைப் லைன் ரெடி.. இந்தியாவில் கேஸ் போக்குவரத்து அடியோடு மாறுது.. எப்படின்னு பாருங்க
டெல்லி: இந்தியாவில் தற்போது எரிவாயு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டேங்கர் லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், அதிக செலவு பிடிப்பதோடு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால், குழாய் வழியாக கேஸ் கொண்டு செல்வதற்கான பணிகளில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதன்படி விரைவில் 2,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் லைன் சேவைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் உலகின் மிக நீளமான கேஸ் பைப் லைனை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பைப் லைன் நிறுவும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், உலகின் நீளமான பைப் லைன் வரும் ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தற்போது இந்தியாவில் எரிவாயு டேங்கர் லாரி மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு அதிகம் என்பதோடு, விபத்துக்களும் அதிகம் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கூட கோவையில் ஒரு கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2,800 கிலோ மீட்டர் தொலைவு
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்தில் சிக்கியது. இதில், 20 பேர் பலியாகினர். 45 பேர் காயம் அடைந்தனர். எனவே இதுபோன்ற விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை, போக்குவரத்து செலவு ஆகிய பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்வதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன.
அதன்படி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்தூஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து 2,800 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட உலகின் மிக நீளமான பைப் லைன் அமைக்கப்பட உள்ளது. மேற்கு கடற்கரையில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் வரை இந்த குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக பகுதியளவு மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும், இந்த ஆண்டு நடுவில் முழுமையாக பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
8.3 மில்லியன் டன் எரிவாயு
இந்த குழாய் வலையமைப்பு மூலமாக ஆண்டுக்கு 8.3 மில்லியன் டன் எரிவாயு சிலிண்டர் கொண்டு செல்ல முடியும். இது இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் போக்குவரத்து செலவு கணிசமான அளவில் குறையும். இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவைதான் பைப் லைன் அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தன.
இதையடுத்து இதற்கான பணிகள் தொடங்கின. கடந்த 2019 ஆம் ஆண்டு பைப்லைன் அமைக்கும் பணிகள் தொடங்கின. கொரோனா பெருந்தொற்று, லாக்டவுன் உள்ளிட்ட சவால்கள், உக்ரைன் - ரஷ்யா போரால் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்டவையால் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப்லைன் நெட்வொர்க் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications