இறக்குமதியாகும் அமெரிக்க பயிர்கள்! இந்திய விவசாயிகள் நிலை என்ன? - எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
டெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா போட்டிருக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் எல்லா பயிர்களும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது எனில், இந்திய விவசாயிகள் எதை விளைவிப்பார்கள்? என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
மக்களவையில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், "பட்ஜெட்டில் உத்தரப் பிரதேசத்திற்கு என பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை மத்திய அரசு விளம்பரப்படுத்துகிறது.

மறுபுறம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. எல்லா பயிர்களும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது எனில், இந்திய விவசாயிகள் எதை விளைவிப்பார்கள்? சமூக வளர்ச்சி குறித்து மத்திய அரசு கனவு காண்கிறது. ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் முன்னேறாதவரை, வளர்ந்த இந்தியா எனும் கனவை அடைய முடியாது. இடஒதுக்கீடு விஷயத்தில் பாஜக முறைகேடு செய்கிறது" என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய திமுக எம்பி கனிமொழி சோமு, "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக தோல்வியடைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறா்" என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், "இந்த பட்ஜெட் வேடிக்கையானது. விபத்துக்கு உள்ளாக இருக்கும் கார்களில், ஏர் பேக்குகளை மாற்றியமைப்பது போன்ற வீண் முயற்சி. அரசு செலவினங்களை குறைத்திருக்கிறது. மறுபுறம் வரி வருவாய் அப்படியே தேக்கமடைந்திருக்கிறது" என்று விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றனர். மொத்தமா 118 எம்பிக்கள் கையெழுத்து போட்டு இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. இது நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புள்ளிவிவரக் குறிப்பு
இந்தியாவை பொறுத்தவரை, வேளாண் துறை அதிக வேலை வாய்ப்புகளை கொடுக்கிறது. குறிப்பாக, 43% வேலைக்காக விவசாயத்தை நம்பிதான் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், அமெரிக்காவிலிருந்து குறைந்த விலையில் வேளாண் பொருட்கள் இந்தியாவுக்குள் வருகிறது எனில், விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications