"புதிய பயணத்தை தொடங்குகிறேன்".. பாஜகவில் சேர்கிறாரா சவுரவ் கங்குலி? திடீர் ட்விட்டால் பரபரப்பு
டெல்லி: பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாக ட்விட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணி வாரியமான பிசிசிஐ அமைப்பின் தலைவராக சவுரவ் கங்குலி பணியாற்றி வருகிறார். இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கங்குலி. துவண்டு கிடந்த இந்திய அணியை மீட்டு, பலமான அணியை கட்டமைத்த சிறப்பு கங்குலியை சேரும்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறப்பான ஒருவராக கங்குலியும் மதிக்கப்படுகிறார்.

கங்குலி
கேப்டனாக இவர் சறுக்கிய சில போட்டிகள், இவர் எடுத்த சில முடிவுகள் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருந்தாலும் இந்திய அணியின் திசையை மாற்றிய முக்கியமான கேப்டன்களில் கங்குலியும் ஒருவர். இவர் பாஜகவில் இணைய போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த வருடம் கூட மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது பாஜக சார்பாக கங்குலி முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

பிசிசிஐ அமித் ஷா
பிசிசிஐ அமைப்பில் அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராக இருக்கிறார். இதனால் ஜே ஷாவுடன் கங்குலி நெருக்கமாக இருக்கிறார். அமித் ஷா இதை பயன்படுத்தி கங்குலியை மேற்கு வங்க பாஜகவில் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இவர் களமிறக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

உடல்நிலை சரியில்லை
ஆனால் அப்போது அவருக்கு உடல்நிலை பிரச்சனை வந்ததால் அரசியலில் நுழைய முடியவில்லை. இந்த நிலையில்தான் சவுரவ் கங்குலி, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாக ட்விட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி.

புதிய பயணம்
மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை, என்று குறிப்பிட்டுள்ளார். கங்குலி அரசியலுக்குள் நுழைகிறாரா, பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வியை இந்த ட்விட் எழுப்பி உள்ளது. குடியரசுத் தலைவர் மூலம் இவர் ராஜ்ய சபா நியமன எம்பி ஆக வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் வட்டமடிக்க தொடங்கி உள்ளனர்.
ஆனால் இவர் இப்போதைக்கு பிசிசிஐ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை. இவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெ ஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications