மீண்டும் பாஜகவுடன் இணையும் பிரசாந்த் கிஷோர்? புயலை கிளப்பும் "அந்த" லெட்டர்.. என்ன மேட்டர்?
டெல்லி: தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மீண்டும் பாஜக உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு அவரது கட்சியே முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தொடர்பான செய்திகள் தான் இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவே வெல்லும் என அவர் கூறியிருந்தார்.

அதாவது பாஜக வெல்லும் இடங்களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் கூட பாஜகவே வெல்லும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதம் ஏற்பட்டது.
பரவிய தகவல்: இதற்கிடையே தேர்தல் ஆலோசகரும் ஒடிசாவில் ஜான் சுராஜ் என்ற கட்சியை நடத்தி வருபவருமான பிரசாந்த் கிஷோர் மீண்டும் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அதாவது பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்த செய்தி இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், பலரும் இதை உண்மை என்றே நம்பத் தொடங்கினர்.
மறுப்பு: இதற்கிடையே இந்த தகவலுக்கு பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜான் சுராஜ் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக கடிதம் என்று இணையத்தில் பரவும் கடிதம் போலியானது என்று அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சாடியுள்ள ஜான் சுராஜ், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுமென்றே போலி செய்தியைப் பரப்புவதாகச் சாடியுள்ளது. மேலும் ஜெய்ராம் ரமேஷ் இந்த கடிதத்தைத் தனது வாட்ஸ்அப்பில் பரப்புவதையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜான் சுராஜ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "திட்டமிட்டுப் பரப்பப்படும் போலி செய்திகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் காங்கிரஸும், ராகுல் காந்தியும் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட முறையில் போலி ஆவணத்தை எப்படிப் பரப்புகிறார் என்பதை நீங்களே பாருங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
போலி கடிதம்: சமூக வலைத்தளங்களில் பரவும் போலி கடிதத்தில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் போலி கடிதம் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் கட்சியே இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
பிரசாந்த் கிஷோர்: சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் வெற்றி கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாஜக 2019இல் பெற்றதை போல சுமார் 300 இடங்களை பெறும்.. அல்லது அதை விடக் கூடுதல் இடங்களைப் பெறும்.. பாஜக தங்கள் இலக்காக 370ஐ நிர்ணயம் செய்தது தான் முக்கியமானது.
அதன் பிறகு கடந்த 2, 3 மாதங்களாக 400 இடங்கள் என்பதைச் சுற்றியே விவாதம் இருந்துள்ளது. இப்போது யாரும் பாஜக வெல்லாது எனக் கூறவில்லை.. 400 இடங்களைப் பெற மாட்டார்கள் என்றே கூறியுள்ளார். பாஜகவின் யுக்தி மிகச் சரியாக வேலை செய்துள்ளதையே இது காட்டுகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications