சமோசா ஏன் தரல? ‛இந்தியா’ கூட்டணி மீட்டிங்கில் அதிருப்தி! காங். சண்டைக்கு போன எம்பி! யார் தெரியுமா?
டெல்லி: டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில், ‛‛இந்தியா'' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சமோசா வழங்கப்படவில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்பி சுனில் குமார் பிந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, ஜேடியூ, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகாரிலும், 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூரிலும், 3வது ஆலோசனை கூட்டம் மும்பையிலும் நடந்தது. இதையடுத்து 4வது ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டணியில் கூட்டணி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2024 ஜனவரி மாதம் இதுபற்றி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடிஎஸ்) கட்சியை சேர்ந்த எம்பி சுனில் குமார் பிந்து காங்கிரஸ் கட்சி மீட்டிங்கில் சமோசா தரவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று கூறியதாவது: நேற்றைய மீட்டிங்கில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனாலும் நேற்றைய கூட்டத்தில் டீ, பிஸ்கட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், கட்சிக்கு ரூ.138, ரூ.1380 அல்லது ரூ.13,800 நன்கொடை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. நன்கொடைகள் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். இதனால் நேற்றைய கூட்டம் சமோசா இல்லாமல் வெறும் டீ மற்றும் பிஸ்கட்டுடன் முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதமின்றி முடித்து கொள்ளப்பட்டுள்ளது " என தெரிவித்தார்.
இவரது இந்த கருத்து தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. பாஜகவினர் காங்கிரஸ் மற்றும் ‛இந்தியா' கூட்டணியின் தலைவர்களை கிண்டல் செய்து வருகின்றனர். இதுபற்றி பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா, ‛‛இண்டி கூட்டணி மீட்டிங்கில் சமோசா வழங்கவில்லை என நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதோடு முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்வரை இனி இதுபோன்ற புகார்கள் தொடர்ச்சியாக வரும்'' என கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications