இனி இந்த தொகுப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாதீங்க! லிஸ்ட் கொடுத்த இந்தியா கூட்டணி
டெல்லி: இந்தியா கூட்டணியின் சார்பில் சில தொகுப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான லிஸ்ட் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிகுந்த சவாலானதாக பார்க்கப்படுகிறது. பாஜவை பொறுத்த அளவில் இந்த முறையும் பிரதமராக நரேந்திர மோடிதான் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் எனும் பெருமையை பெறுவார். மேலும் 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது.

எனவே இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம். மட்டுமல்லாது பாஜக பலவீனமாக உள்ள தென் மாநிலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்த பாஜகவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அதேபோல காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாகும். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் ஏராளமான மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிலர் பாஜவிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேபோல பஞ்சாப், டெல்லி உள்ளாட்சி உள்ளிட்ட இடங்களில் தனது வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. இதற்கு எதிராக சண்டை செய்வது அவசியம். எனவே இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 26 கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இந்த கூட்டணியின் மூன்று கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் பாஜக சார்பு நிலையில் இருப்பதாகவும், குற்றம்சாட்டியிருந்தது. அதேபோல ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜடோ யாத்திரைக்கு சில தொலைக்காட்சி ஊடகங்கள் போதுமான முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தது.
எனவே சில தொகுப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. இதனையடுத்து இன்று இதற்கான லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதாவது, அர்னாப் கோஸ்வாமி (ரிபப்ளிக் தொலைக்காட்சி), அதிதி தியாகி (பாரத் எக்ஸ்பிரஸ்), அமிஷ் தேவ்கன் மற்றும் அமன் சோப்ரா (நியூஸ் 18 இந்தி), ஆனந்த் நரசிம்மன் (சிஎன்என்-நியூஸ் 18), அசோக் ஸ்ரீவஸ்தவ் (டிடி நியூஸ்), சுதிர் சவுத்ரி மற்றும் சித்ரா திரிபாதி (ஆஜ் தக்), நவிகா குமார் (டைம்ஸ் நவ்), கௌரவ் சாவந்த் மற்றும் ஷிவ் அரூர் (இந்தியா டுடே டிவி), பிராச்சி பராஷர் (இந்தியா டிவி), ரூபிகா லியாகத் (பாரத் 24) மற்றும் சுஷாந்த் சின்ஹா (டைம்ஸ் நவ் நவ்பாரத்) ஆகிய தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளில் இந்தியா கூட்டணியின் சார்பில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு சில எதிர்ப்புகள் இருந்ததாகவும், ஆனால் இறுதியில் முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் ஒருங்கிணைப்புக்குழு கூறியுள்ளது. தொலைக்காட்சி ஊடகங்களில் பாஜக சார்பு நிலையில் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூறியிருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications