ஹிண்டன்பர்க் கிளப்பிய குற்றச்சாட்டு.. மாதபி பூச் மீதான புகார்களை முடித்து வைத்தது லோக்பால்
டெல்லி: பங்கு சந்தை மோசடி குறித்து அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தது. இதில் செபி முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதும் புகார்கள் இருந்தன. இந்நிலையில் இதனை விசாரித்து வந்த லோக்பால் அமைப்பு, குற்றச்சாட்டுகள் அனுமானங்களின் அடிப்படையில் உள்ளதாக கூறி புகார்களை முடித்து வைத்திருக்கிறது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தன. அதாவது, வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அதானி நிறுவனம் அங்கு போலியான(ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தனது பங்குகளின் விலையை/மதிப்பை செயற்கையாக உயர்த்தியதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

அதை தொடர்ந்து, அப்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவராக இருந்த மாதபி பூரி புச் மீதும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. அதாவது பங்கு சந்த முறைகேட்டை விசாரிக்கும் இடத்தில் செபி இருக்கிறது. செபியின் தலைவராக மாதபி இருக்கிறார். ஆனால் விசாரணையில் அதானி நிறுவனத்தின் மீது எந்த குற்றமும் இல்லை என்று செபி கூறிவிட்டது. இதற்கு அதானி தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி சில பங்குகளை வைத்திருப்பது காரணமாக இருக்கலாம் என்று குற்றம்சாட்டியிருந்தது.
அதாவது வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் ஷெல் நிறுவனங்களில் மாதபியும் அவரது கணவரும் பங்குகளை வைத்திருந்தார்கள் என்பதுதான் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் மாதபி மீது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா உட்பட மூவர் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம் புகார் அளித்தனர். புகாரையடுத்து லொக்பால் அமைப்பு விளக்கம் கேட்டு மாதபிக்கு கடந்த நவம்பரில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதேபோல புகாரை கடந்த டிசம்பரில் மறு பரிசீலனையும் செய்திருந்தது.
இதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியுடன் மாதபியின் செபி தலைவர் பதவிக்காலம் முடிவுற்றது. அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட லோக்பால் தற்போது புகாரை முடித்து வைத்திருக்கிறது. இது குறித்து லோக்பால் அமைப்பு கூறுகையில், "புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையில் இருக்கின்றன. குற்றத்திற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே புகார் முடித்து வைக்கப்படுகிறது" என லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட அமர்வு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications