விழுந்த அடி அப்படி.! இந்தியாவிடம் மொத்தமா சரண்டர் ஆன மாலத்தீவு அதிபர்.. ஆளே மாறிட்டாரே ஏன்?
டெல்லி: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு சில மாதங்களுக்கு முன்பு மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. ஆனால், இப்போது மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியா வந்துள்ள நிலையில், அவர் ஆளே மொத்தமாக மாறிவிட்டார். இந்தியா உடனான நட்பும் ஒத்துழைப்பும் முக்கியம் என்று சொல்லும் அவர், இந்தியாவின் பாதுகாப்புக்குப் பிரச்சினை வரும் எந்தவொரு செயலையும் செய்ய மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவே இருந்து வந்தது. ஆனால் கடந்த நவ. மாதம் எப்போது மாலத்தீவு அதிபராக முகமது முய்சு தேர்வானாரோ.. அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

மாலத்தீவில் இருந்த இந்தியா ராணுவங்களை வெளியேற்றிய முய்சு, அதன் பிறகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்தார். அதேபோல அவர் சீனா உடனும் நெருக்கம் காட்டியது சர்ச்சையானது.
இந்தியா மாலத்தீவு உறவு: ஆனால், அவரது நடவடிக்கைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் தெரிந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முய்சு, அதன் பிறகு இந்தியாவுடன் நல்லுறவையே வைத்துக் கொண்டு இருக்கிறார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில் மாலத்தீவுகள் செயல்படாது என்று சொன்ன முய்சு, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் இந்தியாவை ஒரு முக்கியமான கூட்டாளி மற்றும் நண்பராகக் கருதுவதாகவும் முகமது முய்சு தெரிவித்தார்.
முய்சு: இந்தியாவுடனான மாலத்தீவுகளின் உறவு மரியாதை மற்றும் இரு தரப்பு நலன்களின் அடிப்படையில் கட்டப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவின் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில் மாலத்தீவுகள் எதையும் செய்யாது. பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேநேரம் எங்கள் நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைச் சமரசம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்கிறோம்" என்றார்.
சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் முய்சு, "மாலத்தீவின் வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் பல நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம். மாலத்தீவுகளின் நன்மைகளை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். இப்படிப் பல நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் போது, குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை. அதேநேரம் இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கிறது" என்றார்.
மாற்றம் ஏன்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு முஷ்டியை முறுக்கிக் கொண்டு இருந்த முய்சு இந்தளவுக்கு மாறிவிட்டது பலருக்கும் ஆச்சரியம் தான். மாலத்தீவு சுற்றுலாவை இந்தியர்கள் மொத்தமாகப் புறக்கணித்ததே இதற்கு முக்கிய காரணமாகும். மொத்தமாகச் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நாடு தான் மாலத்தீவு.. இந்தியப் பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்துகளைக் கூறியதால், இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.
இந்தியர்கள் இப்படி மொத்தமாகப் புறக்கணித்ததால் மாலத்தீவின் பொருளாதாரமே ஆடி போனது. இதன் காரணமாகவே மாலத்தீவு அதிபர் முய்சு இப்போது மொத்தமாக இந்தியாவிடம் சரண்டர் ஆகிவிட்டார். இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்த முய்சு மேலும் கூறுகையில், "அண்டை வீட்டாருக்கு மரியாதை அளிப்பது எங்கள் டிஎன்ஏவிலேயே இருக்கிறது. இந்தியா எங்களுக்குப் பெரிய பங்களிப்பைத் தருகிறது... இந்தியச் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கக் காத்திருக்கிறோம்" என்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications