காலில் விழ முயன்ற நிதிஷ்குமார்! சட்டென தடுத்து நிறுத்திய மோடி! என்டிஏ தலைவர்கள் கூட்டத்தில் பரபர
டெல்லி: என்டிஏ தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும்.
எனவே தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக அரவணைத்து செல்கிறது. இதற்கு கைமாறாக தற்போது முக்கிய துறைகளை கேட்க இரண்டு கட்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் அல்லது என்டிஏ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இன்று காலை டெல்லியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த நிதிஷ்குமார் மோடிக்கு பக்கத்தில் மூன்றாவது இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின்னர் தனது இருக்கையில் அமர்வதற்காக வந்த நிதிஷ்குமாரை பிரதமர் மோடி இடையில் மறித்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். உடனே நிதிஷ்குமார் மோடியின் காலை தொட்டு கும்பிட முயன்றார். ஆனால் மோடி இதற்கு மறுப்பு தெரிவித்து சட்டென நிதிஷின் கையை பிடித்து தவிர்த்துவிட்டார்.
இந்த சம்பவம் அரசியல் தளத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த காலங்களில் நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி வைத்து அம்மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். அப்போது பெரும்பான்மை பெறாததால், பாஜக தயவுடன் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே முக்கிய அமைச்சர் பதவிகளை பாஜக பிடுங்கிக்கொண்டது.
எனவே கடுப்பான நிதிஷ், பாஜக கூட்டணியிருந்து வெளியேறினார். எனவே காங்கிரஸ், இடதுசாரிகள் அவருக்கு ஆதரவு கொடுத்து மீண்டும் முதல்வராக்கியது. இதனையடுத்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியை நிதிஷ் உருவாக்கினார். அதுதான் இந்தியா கூட்டணியாக தற்போது வரை உறுதியாக இருக்கிறது. இருப்பினும், கொஞ்ச நாட்களிலேயே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாஜக பக்கம் நிதிஷ் சாய்ந்துவிட்டார். தற்போது வரை இந்த கூட்டணியே தொடர்கிறது.
மீண்டும் அவர் காங்கிரஸ் பக்கம் வருவார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமரின் காலை பிடித்து தனது விசுவாசத்தை நிதிஷ் காட்ட முயற்சித்திருக்கும் சம்பவம் சலசலப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications