"அதை" பற்றி பேசவில்லை.. சிவில் கோர்ட் போங்க.. தீர்ப்பில்.. ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் ஒரே குட்நியூஸ்
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும் பொதுக்குழு தீர்மானங்களை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தாலும் தீர்மானங்களுக்கு எதிராக தனியாக ஓபிஎஸ் சிவில் வழக்கு தொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லும் என்று இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர்.

தீர்ப்பு என்ன
இந்த வழக்கில்தான் இன்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

தீர்மானங்கள்
அதாவது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்பது உறுதியாகிறது. ஆனால் இதில் உச்ச நீதிமன்றம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரே ஒரு ஆறுதல் செய்தி கொடுத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும் பொதுக்குழு தீர்மானங்களை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தாலும் தீர்மானங்களுக்கு எதிராக தனியாக ஓபிஎஸ் சிவில் வழக்கு தொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதாவது தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடுக்க முடியும்.

சிவில் வழக்கு
சிவில் வழக்கு என்றால், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கலாம். பொதுக்குழு கூடிய விதத்தை எதிர்க்க முடியாது. மற்றபடி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் எதிர்க்கலாம். இது மட்டுமே ஓ பன்னீர்செல்வத்திற்கு வந்து இருக்கும் கொஞ்சம் சாதகமான செய்தி. அதோடு தேர்தல் ஆணையத்தை முறையிடலாம் என்றும் ஓ பன்னீர்செல்வத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழி கொடுத்து உள்ளது. எனவே ஓ பன்னீர்செல்வம் அங்கே முறையீடு செய்யலாம். ஆனால் சிவில் வழக்குகள் பல ஆண்டுகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்த வழக்கு காரணமாக இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications