“50-50” செலவு மிச்சம்.. ஒரே நாடு ஒரே தேர்தல்! பரிந்துரை வழங்கிய குழு - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
டெல்லி: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்துக்கு மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டம் குறித்து மத்திய அரசு பேசி வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருக்கிறார்.

தேர்தல்களால் பாதிப்பு
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "தேர்தல்களை அடிக்கடி நடத்துவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் இதன் காரணமாக தடைபடுகிறது. தேர்தல்களை நடத்துவதற்கான செலவும் அதிகமாகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை நடத்தி வருகிறது.

சரிபாதி செலவு
2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 50 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து இருக்கின்றன. மத்திய அரசு மக்களவைத் தேர்தல் செலவுகளையும், மாநில அரசுகள் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளையும் செய்கின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் மத்திய அரசுடன் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவுகளை பிரித்துக் கொள்ளலாம்.

நாடாளுமன்ற குழு பரிந்துரை
இது தொடர்பாக நாடாளுமன்ற குழு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. அந்த குழு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. சட்ட ஆணையமே இது குறித்த முடிவை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார். மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ள நிலை அதுகுறித்த கேள்விக்கும் கிரண் ரிஜிஜு பதிலளித்து உள்ளார்.

உச்சநீதிமன்ற கிளைகள்
அதில், "மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைப்பது தொடர்பாக மூன்று முறை சட்ட ஆணையம் பரிந்துரைகளை வழங்கி உள்ளது. டெல்லியில் ஒரு அரசியல் சாசன நீதிமன்றமும், இந்தியாவின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மத்திய நீதிமன்றங்களை அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications