ராகுலுக்கு 2 ஆண்டு ஜெயில்.. கடும் கோபத்தில் காங்.. நாடாளுமன்றத்தில் இன்று புயலை கிளப்ப திட்டம்
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்று புயல் கிளம்பும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அதானிக்கு எதிராக கூட்டுக்குழு விசாரணை கேட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 8 நாட்களாக எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அதேநேரம் இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜகவும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இந்த சூழலில் தான் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றே தெரிகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று அனல் பறக்கும் என்று தெரிகிறது.

ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.

திருடர்கள்
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குற்றச்சாட்டு
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

2 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார்.
நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

புயலை கிளப்பலாம்
அதேநேரம் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிபதி எச்.எச்.வர்மா தனது தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அத்துடன் அவர் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கினார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பும் என தெரிகிறது. நாடாளுமன்றம் கடந்த 8 நாட்களாக முடங்கி வருகிறது. 8 நாட்களாக பட்ஜெட் குறித்து சரியாக விவாதம் நடைபெறவில்லை. இந்த சூழலில் இன்றும் நாடாளுமன்றம் முடங்கும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications