36 நகரங்கள், 400 ட்ரோன்கள்! சீனா மட்டுமின்றி துருக்கி UAVகளையும் ஏவிய பாக்! ராணுவ மேஜர் தகவல்
டெல்லி: எல்லையில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை இந்தப் பதற்றத்திற்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. அதற்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதற்கிடையே நேற்றைய தினம் காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

துருக்கி ட்ரோன்கள்
இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இந்தியப் பாதுகாப்புப் படைகளின் நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம்
இது தொடர்பாகப் பாதுகாப்புப் படையின் சோபியா குரேஷி கூறுகையில், "மே 7-8ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் ராணுவம் நமது நாட்டின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து மேற்கு எல்லை முழுக்க பல இடங்களில் இந்திய வான்வெளியில் அத்துமீறியது. இது மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது.
400 ட்ரோன்கள்
36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. நமது வான்வழி பாதுகாப்பு அமைப்பு குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிக்கவே இதுபோல தாக்குதல் நடத்தியிருக்கலாம். வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்களை மீட்டு தடயவியல் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டத் தகவல்களை வைத்துப் பார்த்தால் அவை துருக்கியின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் போலவே இருக்கிறது" என்றார்.
இந்தியா பதிலடி
இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்த முயன்றிருந்தது. அப்போது அவர்கள் சீன ட்ரோன்களை பயன்படுத்தியிருந்த நிலையில், அதை இந்தியா முறியடித்ததாக அப்போது ராணுவம் செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தியிருக்கிறது. இருப்பினும், இந்தியா அதையும் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் இதுபோன்ற நடவடிக்கைகளால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எந்தவொரு இடத்திலும் பதற்றத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்குத் தக்கப் பதிலடிகளைக் கொடுத்தே வருகிறது.
பொய்களை பாகிஸ்தான்
அதேநேரம் அடிவாங்கிய பாகிஸ்தான் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ச்சியாகப் பொய்யான தகவல்களைப் பரப்ப முயன்று வருகிறது. பழைய வீடியோக்கள், தொடர்பில்லாத சம்பவங்களின் வீடியோக்கள், அவ்வளவு ஏன் வீடியோ கேம் காட்சிகளைக் கூட வைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது. ஆனால், அதையும் கூட இந்தியா முறியடித்து வருகிறது. பாகிஸ்தான் பரப்பும் பொய்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications