'இந்தியாவில் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாக், வேரிலிருந்தே அழிக்கப்படும்..' ராஜ்நாத் சிங் வார்னிங்
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பாகிஸ்தான் விரும்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தை வேரிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1971ஆம் ஆண்டு போர் நடந்தது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெறும் சமயத்தில் இந்த போர் நடந்தது.
வெறும் 13 நாட்கள் மட்டுமே நடந்த இந்த போரில் இந்தியா மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இந்திய ராணுவத்தின் அதிரடியைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் 13 நாட்களில் சரணடைந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதம்
இந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையிலும் இந்திய- வங்கதேச நட்புறவைக் குறிக்கும் வகையிலும் இந்திய கேட் பகுதியில் ஸ்வர்னிம் விஜய் பர்வ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், "இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது. 1971இல் பாகிஸ்தானின் திட்டங்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இப்போது பயங்கரவாதத்தை வேரிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வங்கதேச விடுதலை
வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா பங்களித்துள்ளது. இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையே மிகச் சிறப்பான ஒரு உறவு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், வங்கதேசம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இது உலகின் பிற நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரை வென்ற 50ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக நாம் இன்று இந்தியா கேட் பகுதியில் கூடியிருக்கிறோம். தெற்காசியாவின் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றியதில் இந்த போருக்கும் இந்தியப் படைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இந்த புகழ்பெற்ற வெற்றியை இந்த விழா நினைவுபடுத்துகிறது

பிபன் ராவத்
இந்த நிகழ்வைப் பிரம்மாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது, ஆனால் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு, இதை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், நான் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன். இந்த நாளில், 1971 போரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அந்தத் துணிச்சலான வீரர்களின் தியாகத்திற்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.

நமது ராணுவம்
நமது வங்காள சகோதரர்கள் அப்படி என்ன தவறாகச் செய்தார்கள் என சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரினர். அவர்கள் தங்கள் கலை, கலாசாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க முயன்றனர். அரசியல் மற்றும் ஆட்சியில் அவருக்கு உரியப் பிரதிநிதித்துவம் தேவை என்று வலியுறுத்தினர். அந்த சமயத்தில் நமது வங்காள சகோதரர்கள் மீதான அநீதி மற்றும் அட்டூழியங்கள் ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் மக்களின் விடுதலைக்கு உதவியது நமது ராணுவம் தான்.

அரிதாக காண முடியும்
இந்தப் போர் என்பது நமது ஒழுக்கம், நமது ஜனநாயக மரபுகள் மற்றும் நியாயமான நடத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது. போரில் மற்றொரு நாட்டை தோற்கடித்த பிறகும் கூட, ஆதிக்கத்தை வெளிப்படுத்தாமல், கைப்பற்றிய பகுதிகளைச் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தது வரலாற்றில் அரிதாகவே காண முடியும்" என்று அவர் கூறினார்.
Recommended Video

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு
கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்று காலை கூட தெற்கு காஷ்மீரின் அவந்திபோராவில் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.











Click it and Unblock the Notifications