மன்மோகன் ஆட்சியில் “ஓட்டுக்கு பணம்” விவாதத்தை பார்த்தோம்.. பிரதமர் மோடி பேச்சின் டாப் 10 பாயிண்ட்ஸ்!
டெல்லி: பிரதமர் மோடி இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புகூட்டத் தொடரில் சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார். அவரது பேச்சில் இடம்பெற்ற முக்கியமான 10 அம்சங்களை இங்கே பார்க்கலாம்..
நாடாளுமன்ற சிறப்புகூட்டத் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. மீதமுள்ள 4 நாட்களும் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் அவை நடைபெற உள்ளது.

75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி லோக்சபாவில் இன்று பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றம் குறித்தும், பழைய நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தான் முதன்முதலில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் அடியெடுத்து வைத்தது குறித்தும் பேசினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற்ற 10 முக்கியமான பாயிண்ட்டுகள் வருமாறு:
1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் அனைவரும் நன்றி கூற உள்ளோம். ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது உண்மை தான். ஆனால் இது பல இந்தியர்களின், கடின உழைப்பால், இந்தியர்களின் பணத்தால் கட்டப்பட்டது என்பதை ஒருபோதும் மறக்க முடியாது, பெருமையுடன் சொல்லலாம்.
2. ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இந்த நாடாளுமன்றத்தில்தான் பண்டிட் நேரு நள்ளிரவு நேரத்தில் பேசியது இன்றுவரை அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களை இந்த பாராளுமன்றம் இழந்தபோது அவர்களுக்கு பொருத்தமான அஞ்சலி செலுத்தப்பட்டது.
3. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை உருவாக்கியபோது எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தெலுங்கானா உருவாக்கம் கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றது. தெலுங்கானாவிலும் சரி, ஆந்திராவிலும் சரி கொண்டாட்டங்கள் இல்லை.
4. இந்தப் பாராளுமன்றம் வெறும் நான்கு எம்.பி.க்களைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சியில் அமர்வதைக் கண்டது. அதே நேரத்தில் 100 எம்.பி.க்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்ததையும் கண்டது.
5. அவசரநிலைக் காலத்தில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை இந்த அவையும் கண்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த ஓட்டுக்கு பணம் முறைகேடு தொடங்கி 2019 ஆகஸ்ட்டில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது வரை அனைத்தையும் இந்த பார்லிமென்ட் கண்டுள்ளது.
6. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை 7,500 உறுப்பினர்கள் பங்களித்துள்ளனர். சுமார் 600 பெண் எம்.பி.க்கள் இரு அவைகளின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளனர். 25 வயதில் எம்.பியாக இங்கு வந்த திரவுபதி முர்மு தற்போது நாட்டின் குடியரசுத் தலைவராகியுள்ளார்.
7.இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது நாட்டின் பன்முகத் தன்மையை காட்டுகிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். நாம் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்வோம். ஆனால் இந்த பழைய கட்டிடம் வரவிருக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் எப்போதும் ஊக்கமளிக்கக்கூடியதாக திகழும். புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பு பழைய நாடாளுமன்றத்தில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும்.
8. இந்த சபையின் 75 ஆண்டுகால மிகப்பெரிய சாதனையானது, நாடாளுமன்றத்தின் மீது மக்கள் தொடர்ந்து வைத்து வரும் நம்பிக்கையாகும். து அப்படியே தொடர வேண்டும் என்பது எனது விருப்பம்.
9. நாடாளுமன்றத்தைக் காக்க உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நான் தலைவணங்குகிறேன். நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை ஒவ்வொரு இந்தியரும் மறக்க மாட்டார்கள்.
10. இந்தக் கட்டிடத்தில் உறுப்பினராக நான் முதன்முதலில் நுழைந்தபோது, மக்களிடம் இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அடியெடுத்து வைத்தபோது கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன். ஒரு ஏழையும் எம்.பியாக முடியும் என்பதே நமது நாட்டின் ஜனநாயகத்தின் வலிமை.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications