நாடாளுமன்ற கூட்டத் தொடர்.. அமைச்சர் நிர்மலா, ஜெய்சங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
புதுடெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று(திங்கட்கிழமை) தொடங்கியது. அடுத்த மாதம் 12-ந் தேதி வரை, 14 அலுவல் நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி மக்களவை, மாநிலங்களவையில் முதல் கூட்டம் நேற்று காலையில் தொடங்கியது.
அவை கூடியதும், மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயித் அல் நஹ்யான் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி.க்கள் பதவி பிராமணம் எடுத்து கொண்டனர்.

முதல் நாளிலேயே முடங்கியது
தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பல்வேறு பிரச்சினைகள் அதாவது விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வியூகம்
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி விவகாரம் ஆகிய பிரச்சினைகள் எழுப்பபடும் எனத்தெரிகிறது. பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் எனத்தெரிகிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்
இதனிடையே, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து டெல்லியில் இன்று அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா, இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்தும், இலங்கை சூழல் குறித்தும் விரிவாக எடுத்துரைப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

எதற்காக கூட்டம்?
முன்னதாக மழைக்கால கூட்டத்தொடரை ஒட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நம் அண்டை நாடான இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், இந்தியா அதில் தலையிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். இதை ஏற்று இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications