திடீரென மோடிக்கு போன் அடித்த புதின்! நெகிழ்ந்து போன பிரதமர்.. டிசம்பரில் சம்பவம் இருக்கு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்த தினத்தை கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார். இந்த உரையாடலில், புதினை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அழைத்திருக்கிறார்.
தொலைபேசி அழைப்பு குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துகளுக்கும், நீண்டகால நட்பிற்கும் பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். வரவிருக்கும் 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் அதிபர் புதினை இந்தியாவுக்கு வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் உக்ரைன் மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வரி விவகாரம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தியா-அந்நிய நாடுகளின் வர்த்தக உறவு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம், சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் பல்வேறு வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.
கடந்த 2023-24 நிதியாண்டில், இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த வர்த்தகம் சுமார் 65.70 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 4.26 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தது சுமார் 61.44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. அடுத்த நிதியாண்டான 2024-25 இல், இந்த வர்த்தகம் மேலும் அதிகரித்து, சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 4.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், ரஷ்யாவின் இறக்குமதி சுமார் 63.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், ரஷ்யாவுடனான இந்தியாவின் பொருட்கள் வர்த்தகம் ஐந்து மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2021 இல் சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்த வர்த்தகம், 2024-25 நிதியாண்டில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில்தான் இந்தியா மீது அமெரிக்கா வரியை அதிகரித்தது.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதாகக் கூறி, அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 50% வரை கடுமையான வரிகளை விதித்துள்ளது. ஜவுளி, ரத்தின கற்கள், ஆபரணங்கள், மருந்துகள் போன்ற துறைகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களின் விலையை இந்த வரிகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் இறக்குமதிகள் ஆகும்.
இந்த பின்னணியில்தான் மோடி-புதின் உரையாடலை பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க வரி காரணமாக ரஷ்யாவுடனான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா புதிய திட்டத்தை தயார் செய்யலாம். அதற்கு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மோடி-புதின் சந்திப்பு தொடக்க புள்ளியாக கூட இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications