100 வயதிலும்.. எனது தாய் கடைசி காலத்தில் அரசு மருத்துவமனையில் தான் இருந்தார்! தழுதழுத்த பிரதமர் மோடி
டெல்லி: தனது தாயார் 100 வயதில் மரணமடையும் தருவாயிலும் அரசு மருத்துவமனையில் தான் இருந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, ஆடம்பரமற்ற வாழ்க்கையே தான் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.. அதில் 5ஆம் தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி தனது தாயார் குறித்து சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி: லோக்சபா தேர்தலில் மோடி என்ற பிராண்டை முன்னிறுத்தி பாஜக தேர்தலை எதிர்கொள்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இந்த பிராண்டு என்றால் என்ன.. அது எப்படி வேலை செய்யும் என்றே எனக்குத் தெரியாது.. பொதுமக்கள் மோடியின் வாழ்க்கையையும் அவரது பணியையும் பார்க்கிறார்கள்.. அதைப் பார்த்தே வாக்களிக்கிறார்கள்.
நான் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறேன்.. குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகள் மற்றும் பிரதமராக 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். பொதுச் சேவையில் எனது அர்ப்பணிப்பைப் பார்த்தே மக்கள் வாக்களிக்கிறார்கள்" என்றார்.
அரசு மருத்துவமனை: தொடர்ந்து தனது தாயார் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஒரு மாநிலத்தின் முதல்வராக 13 ஆண்டுகள், பிரதமராக 10 ஆண்டுகள் நான் பணிபுரிந்துள்ளேன்.. ஆனால், எனது 100 வயதான தாயார் தனது கடைசி காலகட்டத்தை அரசு மருத்துவமனையில் தான் கழித்தார். இதுவே எனது ஆடம்பரம் இல்லாத ஒரு வாழ்க்கைக்குச் சான்றாகும். இந்த நாட்டிற்கு ஒரு பிராண்ட் தேவையில்லை. என் வாழ்க்கை சற்று வித்தியாசமானது என்பதை நாடு புரிந்து கொள்ளும்" என்று அவர் தெரிவித்தார்.
மோடியின் தாயார் ஹீராபென் கடந்த 2022இல் தனது 100 வயதில் காலமானார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தவறாமல் தனது தாயைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர வாழ்க்கை: ஆடம்பர வாழ்க்கையை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு மோடி தான் குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். "அப்போது காங்கிரஸின் அமர்சிங் சவுத்ரி என்னிடம் 250 உடைகள் இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார். நான் பொது மேடையிலேயே இதற்குப் பதிலளித்தேன்.
இந்த குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் 250இல் இருந்து இரண்டையும் பூஜ்ஜியத்தையும் எடுத்துவிட்டால் வரும் எண்ணிக்கையில் தான் என்னிடம் உடைகள் உள்ளன. இருந்தாலும் அவரது குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் நான் மக்களிடம் கேட்பது ஒன்று தான்..
பதிலடி: உங்களுக்கு ₹250 கோடி திருடும் முதல்வர் வேண்டுமா அல்லது 250 உடை வைத்திருக்கும் முதல்வர் வேண்டுமா? என்று கேட்டேன்.. அதற்கு மக்கள் ஒரே குரலில் 250 உடை வைத்திருக்கும் முதல்வர் வேண்டும் என்றார்கள். அதன் பிறகு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லாமல் போய்விட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications