வீடியோவால் வந்த வினை.. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ரெய்னாவுக்கு சிக்கல்! போலீஸ் புகாரின் பின்னணி
டெல்லி: மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து வீடியோ வெளியிட்டதாக கூறி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் டி20 லெஜன்ட்ஸ் உலக சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய லெஜன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் இந்திய அணியை யுவராஜ் சிங் கேப்டனாக வழிநடத்தினார். இந்த வெற்றியை வீரர்கள் பல்வேறு வகைகளில் கொண்டாடினார்கள். அந்த வகையில் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் யுவராஜ் சிங்குடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
அந்த வீடியோவில் அவர்கள் 3 பேரும் காலில் பாதிப்பு உள்ளவர்கள் போல் சாய்ந்து சாய்ந்து நடந்தனர். இந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோவால் தான் தற்போது யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். அதாவது அவர்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாக டெல்லி போலீசில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை வழங்கியவர் அர்மன் அலி. இவர் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தேசிய கவுன்சிலின் செயல் இயக்குநராக உள்ளார். இந்நிலையில் தான் அர்மன் அலி சார்பில் டெல்லி அமர் காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், ‛‛லெஜன்ட்ஸ் டி20 இறுதி போட்டி வெற்றி கொண்டாட்ட வீடியோவில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, குர்கீரத் மான் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ மூலம் அவர்கள் இந்தியாவில் உள்ள 10 கோடிக்கும் மேலான மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தாய் நிறுவனமான மெட்டா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கியதன் மூலம் மெட்டா தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-யை மீறியுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்திய முன்னாள் வீரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டாலும் கூட தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக இன்னும் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக மாவட்ட இணைய பிரிவுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications