டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளோம்.. சதுரங்கத்தில் சாதித்துள்ளோம்.. ஜனாதிபதி முர்மு பெருமிதம்!
டெல்லி: நாளை நமது நாட்டின் 78வது சுதந்திர தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அப்போது விளையாட்டுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகளைக் குறிப்பிட்டு பேசியுள்ளார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். இந்த உன்னதமான நாளில் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது என இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளைக் குறிப்பிட்டு பேசியுள்ளார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. அவர் பேசுகையில், "விளையாட்டு துறையிலும் நமது தேசம் கடந்த பத்தாண்டுகளில் அதிக முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. தற்போது நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், இந்திய அணி தனது மிகச்சிறப்பான முயற்சியை மேற்கொண்டது. விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, முயற்சி ஆகியவற்றைப் பாராட்டுகிறேன். அவர்கள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சதுரங்கப் போட்டிகளில், கூர்மையான திறன்படைத்த விளையாட்டு வீரர்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள். சதுரங்கத்தில் இந்திய யுகத்தின் தொடக்கம் என்று இது கருதப்படுகிறது. பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களில் நமது இளைய விளையாட்டு வீரர்கள், உலக மேடையிலே தங்களுடைய அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள்." எனக் கூறியுள்ளார் திரௌபதி முர்மு.












Click it and Unblock the Notifications