இந்தியாவில் உலக சுகாதார மைய கிளை ... ரூ.64,180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம்!
டெல்லி: ரூ.64,180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம்(ஆத்மா நிர்பர் ஹெல்த் யோஜனா) தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்தார்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தற்சார்பு இந்தியா
இதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் முதலில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். கொரோனாவால் சர்வதேச பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் மந்த நிலையில் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ27 லட்சம் கோடி மதிப்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

2 தடுப்பூசிகள் வர உள்ளன
2021-ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரவே செய்யும். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தற்போது 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன கொரோனா பரவலை தடுக்க ஜிடிபியில் 13% ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பு கிளை
நடப்பு பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டசத்தை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்ட உள்ளது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். ரூ.64,180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம்(ஆத்மா நிர்பர் ஹெல்த் யோஜனா) தொடங்கப்படும்.

15 சுகாதார மையம்
ரூ.1.41 லட்சம் கோடி செலவில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு 15 சுகாதார மையங்களை அமைக்கும். இது நோய்களுக்கான தேசிய மையத்தை பலப்படுத்தும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுகாதார துறைக்கு 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications