ராகுல் காந்தியின் பதவியை பறிக்க.. பாஜக எம்பி நோட்டீஸ்! இது சாத்தியமா? சட்டம் சொல்வது இதுதான்!
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் (Substantive Motion) கொடுத்திருக்கிறார். இப்படி நோட்டீஸ் கொடுத்து ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்க முடியுமா? நாடாளுமன்ற சட்டம் சொல்வது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை, மத்திய அரசு மீது வைத்து வருகின்றன. இப்படி இருக்கையில், நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும், பாரத மாதாவை பாஜக விற்றுவிட்டது எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக துபே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனவும் துபே வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், ராகுல் காந்திக்கு பிரச்சனைதான். ஏனெனில், அவையில் 50% ஆதரவு இருந்தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ராகுல் காந்தி பதவி பறிபோகுமா?
இதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மக்களவையில் 50%க்கும் அதிகமான பலம் ஆளும் கட்சியிடம் இருக்கிறது. எனவே, வாக்கெடுப்பில் தீர்மானம் எளிதில் வெற்றிப் பெற்றுவிடும். நாடாளுமன்ற நடைமுறைப்படி, தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க வேண்டும். அடுத்து, தீர்மானத்தை கொண்டு வந்த துபே, தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். இதனையடுத்து ராகுல் காந்திக்கு அல்லது காங்கிரஸுக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட வாய்ப்பு கொடுக்கப்படும்.
வாழ்நாள் தடை சாத்தியமா?
இந்த விவாதங்களின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்படும். ஆனால், அவருக்கு வாழ்நாள் தடையெல்லாம் போட முடியாது. நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, எம்பிக்களை வெளியேற்ற மட்டுமே செய்ய முடியும். வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனில் நீதிமன்ற உத்தரவு தேவை. இல்லையெனில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
நீதிமன்றத்தின் தலையீடு
ஆனால், இதில் பாஜகவுக்கு சிக்கல் இருக்கிறது. அதாவது, தகுதி நீக்கம் செய்தால், உடனே அதை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடுவார். பொதுவாக நாடாளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால், அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது, அல்லது இயற்கை நீதி மீறப்படுகிறது எனில் அதில் நீதிமன்றம் தலையிடும்.
சட்டம் சொல்வது என்ன?
இதற்கு முன்னர் கடந்த காலங்களிலும் இதுபோன்று நோட்டீஸ் கொடுத்து சில எம்பிக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதன்முறையாக கடந்த 1951ல் இந்த நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டு அப்போதைய எம்பியான ஹெச்.ஜி.முத்கல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட பணம் பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஒரு எம்பியை அவைக்குள் வைத்து கேள்வி எழுப்ப வேண்டும், விமர்சிக்க வேண்டும் எனில் அதற்கு Substantive Motion நோட்டீஸ் கொண்டுவரப்பட வேண்டும். எனவேதான் தற்போது ராகுல் காந்திக்கு எதிராக துபே இந்த நோட்டீஸை கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications