ஓடும் ரயிலில் மிடில் ஃபர்த் அறுந்து விழுந்து.. பயணி இறந்த விவகாரத்தில் திருப்பம்.. ரயில்வே விளக்கம்
டெல்லி: ஓடும் ரயிலில் மிடில் பர்த் அறுந்து விழுந்ததில் கேரள பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரயிலில் செல்லும் பலருக்கும் லோயர் பெர்த்தில் செல்லவே விருப்பம் இருக்கும். இந்நிலையில் ஓடும் ரயிலில் மிடில் பர்த் அறுந்து விழுந்ததில், லோயர் பர்த்தில் படுத்திருந்த கேரள முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். தனது மனைவி, மகன்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் தனது ஊரிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், முதியவர் மரத்திகா அலிகான் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறார். மரத்திகா அலிகான் சென்ற ரயில் அடுத்தத்து மாநிலங்களை கடந்து தெலுங்கானா மாநிலத்தில் பயணித்து கொண்டிருந்தது. முதியவர் மரத்திகா அலிகானுக்கு ரயிலில் கீழ் இருக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கப்பட்டிருந்தது. தான் சென்ற விரைவு ரயில் பயணத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மரத்திகா அலிகான் படுத்து தூங்கி கொண்டிருந்தார்
கேரளாவில் இருந்து சென்ற அந்த ரயிலானது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராதாவிதமாக மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் பயங்கரமாக விழுந்துள்ளது. இதில் இவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ரயிலில் மிடில் பெர்த் விழுந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு கை கால்கள் முழுமையாக செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர் மரத்திகா அலிகானை வாரங்கலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மரத்திகா அலிகான் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உடன்வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து லோயர் பெர்த்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், "அலிகான் மீது விழுந்த இருக்கையை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், நடு படுக்கை உடைந்து விழவில்லை. மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் கீழே விழுந்தது. இதனாலேயே, கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்தார. இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்திய ரயில்வே தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications