“கூட்டமே இல்லை.. ரயில்வே இமேஜை கெடுக்காதீங்க”! புது வீடியோ வெளியிட்டு பதில் சொன்ன ரயில்வே அமைச்சகம்!
டெல்லி: ரயிலில் 2வது ஏ.சி கோச்சில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிவதாக வீடியோவுடன் ஒரு நபர் பதிவிட்ட நிலையில், "ரயில்களில் இந்தளவு கூட்டம் இல்லை. தவறான வீடியோக்களை பதிவிட்டு ரயில்வே துறையின் பெயரை கெடுக்க வேண்டாம்" என புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.
தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொலை தூர ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்க்க முடியும். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிவதால் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

முன்பதிவு பெட்டிகளில் கூட சில நேரங்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் ஏறிவிடுவதையும், இதனால் அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிப்படுவதையும் பார்க்க முடியும். இதொடர்பாக அண்மைக்காலமாக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்பெல்லாம் ஏசி அல்லாத முன்பதிவு பெட்டிகளில் நடைபெற்று வந்த அன்ரிசவ்ர்டு பயணிகளின் ஆக்கிரமிப்பு தற்போது ஏசி பெட்டிகள் வரை நீண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான கோரக்பூருக்கு செல்லும் காஷி எக்ஸ்பிரஸின் 2வது ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளின் கூட்டம் அலைமோதியதை கண்டு செய்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்பதிவு செய்யாத பயணிகள் கழிவறைக்கு செல்லும் பாதையிலும், பெட்டியின் கதவுகளின் அருகிலும் கூட்டமாக நின்றனர். கதவுகள் திறந்திருந்ததால், ஏசி சரியாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, ஒரு பயணி, ஏசி கோச்சில் அன்ரிசர்வ்டு பயணிகள் ஆக்கிரமித்து இருந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற ரயில்வே துறை அதிகாரிகளை மென்ஷன் செய்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். "2-வது ஏசி பெட்டியின் நிலைமையைப் பாருங்கள். உணவு இல்லை, தண்ணீர் இல்லை. கழிவறைக்கு செல்ல இடமில்லை. ஏசி வேலை செய்யவில்லை, கதவு திறந்தே உள்ளது. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்" என்று கூறி எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறு செய்வதாகவும், ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது ரயில்வே அமைச்சகம் ஒரு வாரம் கழித்து ஒரு வீடியோவை பகிர்ந்து, "ரயில்களில் இந்தளவு கூட்டம் இல்லை. தவறான வீடியோக்களை பதிவிட்டு ரயில்வே துறையின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்" என பதில் அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி குறிப்பிட்ட ரயிலில் ஏ.சி கோச்சில் நடந்த சம்பவத்தை வீடியோ பதிவாக பயணி வெளியிட்டிருந்த நிலையில், அப்போது எந்த ஒரு விளக்கமும் அளிக்காத ரயில்வே நிர்வாகம், தற்போது 6 நாட்கள் கழித்து, ஒரு வீடியோ பதிவிட்டு, கூட்டம் இல்லை என பதில் அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications