பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
டெல்லி: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் குழந்தைத் திருமணத்தை தடுக்க நிறைவேற்றப்பட்டது. இது ஆங்கில அரசால் முன்வைக்கப்பட்டு பின்னர் 1929 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதை சார்தா சட்டம் என்றும் அழைப்பர். இந்த சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 14 ஆகவும் ஆண்களின் வயது 18 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் பூப்படையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21 என உயர்த்தப்பட்டது. எனினும் 18 வயதுக்கு முன்னரே சிறுமிகளுக்கு தங்களை விட வயதில் ஒன்றரை அல்லது 2 மடங்கு வயது அதிகம் உள்ள ஆண்களை திருமணம் செய்து வைத்தனர். இதனால் சிறுமிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது.

மிக சிறிய வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. தற்போதும் குழந்தை திருமணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது. இதை மாவட்ட நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். இதனால் பெண்ணின் திருமண வயதையும் 21 ஆக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா இரு அவைகளிலும் தாக்கலானது.












Click it and Unblock the Notifications