நிதி முறைகேடு.. வசமாக சிக்கிய அனில் அம்பானி! பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்தது செபி
டெல்லி: கடன் என்கிற பெயரில், மற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியை பறிக்க முயற்சித்த புகாரின் பேரில், அனில் அம்பானிக்கு செபி தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அனில் அம்பானிக்கு வர்த்தகம் செய்ய முடியாது. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே செபி, பங்கு சந்தை, வர்த்தகம் உள்ளிட்ட பெயர்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருந்தன. இப்படி இருக்கையில், இன்று மற்றொரு சம்பவம் தலைப்பு செய்தியாக உருவெடுத்திருக்கிறது. அதாவது ஸ்டாக் மார்கெட் எனப்படும் பங்கு சந்தையின் ஜம்பவான்களில் ஒருவரான, அனில் அம்பானி மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நடவடிக்கை: இந்த நடவடிக்கை மூலம், அனில் அம்பானி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய, 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல செபி-யில் பதிவு செய்யப்பட்ட எந்த நிறுவனங்களிலும் அனில் அம்பானி, இயக்குநர் உள்ளிட்ட எந்த பதவிகளையும் வகிக்க முடியாது. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடியும் அபராதம் விதித்திருக்கிறது. இந்த கடும் நடவடிக்கைக்கு, நிதி முறைகேடுகளே காரணம் என்று செபி கூறியிருக்கிறது.
விஷயம் என்ன?: ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து (RHFL), அனில் அம்பானி கடன் என்கிற பெயரில் நிதியை பெற முயன்றிருக்கிறார். இது குறித்து RHFL இயக்குநர்கள் குழு ஏற்கெனவே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கையை புறக்கணித்த நிர்வாக தலைமை, முறைகேடாக நிதியை கைமாற்றுவதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது. இதுதான் தற்போதைய கடும் நடவடிக்கைக்கான காரணம்.
ஒரு நபர் எத்தனை நிறுவனங்களை வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், ஒவ்வொரு நிறுவனத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு அந்நிறுவனம் உண்மையாக இருக்க வேண்டும். அதாவது அனில் அம்பானி ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து (RHFL) உட்பட பல நிறுவனங்களை வைத்திருக்கிறார்.
முறைகேடு: இந்த பல நிறுவனங்களில், ஏதோ ஒன்றில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படுகிறது எனில், அதை எதிர்கொள்ள வேண்டும். அதாவது நஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, மற்றொரு நிறுவனத்திலிருந்து முதலீடுகளை எடுத்து இதில் போடு, நஷ்டத்தை ஈடு செய்யக்கூடாது. இப்படி செய்வது, அந்த மற்றொரு நிறுவனத்தை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு பட்டை நாமம் போடுவதற்கு சமம். இந்த சிக்கலில்தான் தற்போது அனில் அம்பானி சிக்கியுள்ளார்.
எனவே, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தை செபி தடை 5 செய்திருக்கிறது. வெறும் தடையுடன் இல்லாமல் இதன் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர் மற்றும் பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோருக்கு தலா ரூ.27 கோடி, ரூ.26 கோடி, ரூ.21 கோடி என அபராதத்தையும் விதித்திருக்கிறது.
அபராதம்: தவிர, ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட மீதமுள்ள நிறுவனங்களுக்கு தலா ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications