தீர்ப்பில் உள்ள இந்த கருத்துகளை நீக்குங்க.. உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு
டெல்லி: உச்ச நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தனக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகள் விசாரணை நீதிமன்றத்தின் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவற்றை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011 - 2015 வரையிலான காலகட்டத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு அரசில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக ஊழல் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது ஒப்பந்ததாரரை திருப்திப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட செயல்திறனுக்கான வழக்குகள் போன்ற அதிகாரபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஊழல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் கையாள முடியாது என்றும் கூறி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பக்கம் 45 மற்றும் 46 ஆகியவற்றில் தனக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துகள் விசாரணை நீதிமன்றத்தின் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவற்றை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அரசியல் சாசன பிரிவு 21 கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், நியாயமான விசாரணைக்கான தனது உரிமையை பாதிக்கக்கூடும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத் தர பணம் வாங்கிய ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்ற குற்றச்சாட்டில், செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் ஜூன் 2023-ல் கைது செய்யப்பட்டார். பின்னர், 2024 செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் விடுதலையானதும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அவர் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதாக கூறி, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் பதவி மற்றும் ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கெடு விதித்ததை அடுத்து, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி, தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஏற்கனவே பல முறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் குறிப்பிட்ட கருத்துக்களை நீக்குமாறு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications