தெற்கில் ஆதிக்கம் செலுத்தும் மாநில கட்சிகள்...தவிடு பொடியான பாஜக.,வின் மாஸ்டர் பிளான்
டெல்லி : நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜக.,விற்கு கடும் அதிர்ச்சியாகவும், பெரிய அடியாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக அதிகம் எதிர்பார்த்த கேரள மற்றும் மேற்குவங்க தேர்தல் முடிவுகள் பாஜக.,வின் மெகா மாஸ்டர் பிளானை தவிடு பொடியாக்கி உள்ளது.
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக.,விற்கு வெற்றி கிடைத்தாலும் ஓட்டு சதவீதம் சரிவடைந்துள்ளது. கேரளாவில் இருந்த ஒரு சட்டசபை உறுப்பினரை பறிகொடுத்துள்ளது பாஜக. அசாம், தமிழகத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது பாஜக.

பாஜக.,வின் மாஸ்டர் பிளான்
நாட்டின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் தென் மாநிலங்களை பொறுத்தவரை பாஜக., நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்ற அளவிலேயே இருந்து வந்தது. இதனால் மாநிலத்தில் வலுவான கட்சியுடன் கூட்டணி அமைத்தால் எளிதில் வெற்றி பெற முடியும். கணிசமான இடங்களை பெற்றால் அதன் மூலம் ஆட்சியில் அங்கம் வகித்து, படிப்படியாக தெற்கில் காலூன்றி விடலாம் என்பது தான் பாஜக.,வின் மாஸ்டர் பிளானாக இருந்தது. இதற்காக புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் உடனும், தமிழகத்தில் அதிமுக.,வுடனும் கூட்டணி வைத்தது. வெற்றி பெற்றால் துணைமுதல்வர் பதவி கேட்கவும் பாஜக திட்டமிட்டிருந்தது.

சரிந்த ஓட்டு சதவீதம்
தமிழகத்தில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருந்தாலும் தமிழகத்தில் பாஜக.,விற்கு இருந்த ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் பாஜக.,வின் ஓட்டு எண்ணிக்கை 16 சதவீதத்தில் இருந்து 11.51 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திலும் 3.57 சதவீதத்தில் இருந்து 2.62 சதவீதமாக குறைந்துள்ளது. இது பாஜக.,விற்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலத்த அடி கொடுத்த கேரளா
கேரளாவில் 2011 முதல் 2016 வரை பாஜக.,வின் ஓட்டு சதவீதம் 6.3 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்ந்தது. இதனால் இந்த தேர்தலில் மேலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். அதிக தொகுதிகள் கிடைக்கும். படிப்படியாக காலூன்றி விடலாம் என்பது தான் பாஜக.,வின் திட்டமாக இருந்தது. 2016 ல் காங்கிரஸ் ஓட்டுக்கள் பெருமளவில் கிடைத்ததால் பாஜக.,வின் ஓட்டு சதவீதம் உயர்ந்ததை வைத்து பார்த்து கணக்கிட்டது. ஆனால் இந்த முறை இடதுசாரிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக.,வின் ஓட்டுக்களை அள்ளி விட்டன. இதனால் ஏற்கனவே இருந்த ஒரு தொகுதியையும் இழந்து, கேரளாவில் வாஷ்அவுட் ஆகி உள்ளது.

பாஜக.,வின் வெற்றியை தடுத்த காங்கிரஸ்
கேரளாவில் பல தொகுதிகளில் காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல இடங்களில் போராடியே வென்றது. ஒருவேளை காங்கிரஸ் கடும் போட்டி தராமல் இருந்திருந்தால் கேரளாவில் பாஜக.,விற்கு 5 இடங்கள் வரை கிடைத்திருக்கலாம் என காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரே கூறுகின்றனர்.

பாஜக.,விற்கு எதிரான பிரசாரம்
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக.,வுடன் கூட்டணி வைத்திருந்தாலும் பாஜக.,விற்கு எதிராக அலையை திமுக சரியாக பயன்படுத்தியது. பிரச்சாரத்தின் போது பாஜக.,வை காரணமாக வைத்தே அதிமுக.,விற்கு எதிரான பிரச்சாரத்தை திமுக முன்வைத்தது. திமுக.,வின் இந்த பிரச்சார வியூகம் எதிர்பார்த்ததை விட அதிகமான பலனை தந்துள்ளது. அதுவும் கோ பேக் மோடி போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமானதும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

தமிழகத்தை அதிகம் நம்பிய பாஜக
தமிழகத்தில் 10 இடங்கள் வரை கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. மாநில தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு போன்றோர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்தது. இருந்தாலும் தற்போது கிடைத்துள்ள 4 இடங்களை வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம் என பாஜக தெரிவித்துள்ளது.

முயற்சியை தொடர பாஜக திட்டம்
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம், கேரளாவில் பாஜக பற்றி யாரும் பேசவில்லை. தற்போது பேசப்படும் கட்சியாகி உள்ளது. இதையே பயன்படுத்தி தொடர்ந்து வியூகங்களை மாற்றி, மக்கள் மனங்களில் இடம்பிடிப்போம். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் வலுவான கட்சியாக பாஜக இருக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications