வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார்.. அனைத்து கட்சி கூட்டத்தில் சொன்ன பிரதமர்?
டெல்லி : வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க தற்போதும் தயாராக உள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சட்டங்களை திரும்பப் பெறுவதை தவிர வேறு என்ன கோரிக்கைகளை வேண்டுமானாலும் விவசாயிகள் முன்வைக்கலாம். அதனை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான் னெ விவசாயிகளிடம் கூறினார்.

ஆனால் இந்த ஏற்க மறுத்த விவசாயிகள், போராட்டத்தை கைவிடவும் மறுத்தனர். குடியரசு தினத்தன்று டெல்லியின் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக 12 விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசு தலைவரின் உரையுடன் துவங்கியது. ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி உரையை புறக்கணித்தன. இத்தகைய பரபரப்பான சூழலில் பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளை கோபப்படுத்தும் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை 18 மாதங்கள் நிறுத்தி வைக்க தற்போதும் நாங்கள் தயாராக உள்ளோம். அதே சமயம் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் ஒரு வார காலத்திற்குள் களைந்து, பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications