நீதிபதியை ‛மை லார்ட்’ என அழைக்கலாமா? வழக்கறிஞரால் கடுப்பான உச்சநீதிமன்ற ஜட்ஜ்.. முக்கிய ‛அட்வைஸ்’
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நீதிபதியை பார்த்து ‛மை லார்ட்'.. ‛மை லார்ட்' என அடிக்கடி அழைத்த வழக்கறிஞரிடம், ‛மை லார்ட்' என சொல்வதை நிறுத்தினால் சம்பளத்தில் பாதியை தந்து விடுகிறேன்' என நீதிபதி பிஎஸ் நரசிம்மா கூறி முக்கிய அட்வைஸ் ஒன்றை வழங்கினார்.
நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்ட் (My Lord), யூவர் லார்ட்ஷிப்(Your Lordship) என அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்தே இப்படி அழைக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

நம்மில் பலரும் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடப்பதை பார்த்திருக்க மாட்டோம். இருப்பினும் நீதிமன்றங்கள் தொடர்பான காட்சிகளில் சினிமாவில் பார்த்திருப்போம். அதிலும் வாதாடும் வழக்கறிஞர்கள் ‛மை லார்ட்' என்றே நீதிபதிகளை அழைப்பார்கள்.
இதற்கிடையே தான் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி ஏஎஸ் போபண்ணா தலைமையிலான அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்தது. அந்த அமர்வில் நீதிபதி பிஎஸ் நரசிம்மா இடம் பெற்றிருந்தார். அப்போது மூத்த வழக்கறிஞர் ஒருவர், ‛‛அடிக்கடி ‛மை லார்ட்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்த வேளையில் நீதிபதி பிஎஸ் நரசிம்மா குறுக்கீட்டதோடு, ‛‛எத்தனை முறை தான் ‛மை லார்ட்' என அழைப்பீர்கள். இவ்வாறு சொல்வதை நீங்கள் நிறுத்திவிட்டால் என் சம்பளத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன். ‛மை லார்ட்' என அழைப்பதற்கு பதில் நீங்கள் ஏன் ‛சார்' என அழைக்க கூடாது. இல்லையெனில், நீங்கள் எத்தனை முறை ‛மை லார்ட்' என அழைக்கிறீர்கள் என்பதை எண்ணி கொண்டிருப்பேன்'' என்று கூறினார்.
இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளை மை லார்ட்', யூவர் லார்ட்ஷிப் என்று வழக்கறிஞர்கள் யாரும் அழைக்கக் கூடாது என்று 2006ல் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. நீதிபதிகளை இப்படி அழைப்பது என்பது காலனித்துவ கால நினைவாக இருக்கிறது. அதோடு அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது எனக்கூறி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் கூட வழக்கறிஞர்கள், நீதிபதிகளை ‛மை லார்ட்', யூவர் லார்ட்ஷிப்' என அழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் நரசிம்மா அப்படி அழைப்பது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications